திருப்பூரில் பெண் டாக்டரிடம் கழுத்தில் ஊசியை வைத்து சங்கிலி பறிப்பு 2 வாலிபர்கள் கைது

திருப்பூரில் பட்டப்பகலில் துணிகரம் பெண் டாக்டரிடம் கழுத்தில் ஊசியை வைத்து சங்கிலி பறிப்பு 2 வாலிபர்கள் கைது

Update: 2017-06-03 22:13 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் பட்டப்பகலில் பெண் டாக்டரிடம் கழுத்தில் ஊசியை வைத்து குத்தி விடுவதாக மிரட்டி 2¼ பவுன் சங்கிலியை துணிகரமாக பறித்த வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பல் மருத்துவர்

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சொர்ணபுரி அவென்யூ 2–வது வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பூமா வீரமகாலட்சுமி (வயது 50). இவர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் இவர் வழக்கம்போல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அப்போது இவரது மருத்துவமனைக்கு 2 வாலிபர்கள் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்த மருத்துவமனை ஊழியரிடம் பல் வலி இருப்பதாகவும், அதற்கு டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

மிரட்டி நகை பறிப்பு

இதை நம்பிய மருத்துவமனை ஊழியர் ஒரு வாலிபரை டாக்டர் அறைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவருடன் மற்றொரு வாலிபரும் உள்ளே சென்றுள்ளார். அந்த வாலிபர்களிடம் டாக்டர் பூமா வீரமகாலட்சுமி எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது பல் வலி இருப்பதாக ஒருவர் கூறி உள்ளார். இதையடுத்து டாக்டர் அந்த வாலிபரின் வாயை திறக்க சொல்லி பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மற்றொரு வாலிபர் டாக்டரின் கழுத்தில் பெரிய குத்தூசியை வைத்து கழுத்தில் கிடந்த சங்கிலியை கழட்டி தருமாறு மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 2¼ பவுன் சங்கிலியை கழட்டி அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார். அடுத்த நிமிடம் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து சங்கிலியுடன் தப்பி ஓடினர். அப்போது டாக்டர் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுள்ளார்.

2 வாலிபர்கள் கைது

அவருடைய சத்தத்தை கேட்டு அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர் வாலிபர்கள் 2 பேரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் அந்த 2 பேருக்கும் தர்மஅடி கொடுத்து அவர்களை 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த 2 பேரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஒண்ணாக்கரையை சேர்ந்த சிவராஜ் (25) மற்றும் தர்மபுரி மாவட்டம் குண்டாளப்பட்டி பகுதியை சேர்ந்த மாதையன் (25) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் 2 பேரும் நோயாளிகள் போல் நடித்து பல் டாக்டரிடம் சங்கிலியை பறித்தது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வாலிபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 2¼ பவுன் சங்கிலியை போலீசார் டாக்டர் பூமா மகாவீரலட்சுமியிடம் ஒப்படைத்தனர். திருப்பூரில் பட்டப்பகலில் ஊசி முனையில் பெண் டாக்டரிடம் சங்கிலியை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்