தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் பாத்திர தொழில் முடக்கம்
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் பாத்திர தொழில் முடக்கம் தொழிலாளர் குடும்பத்தினர் தவிப்பு
அனுப்பர்பாளையம்,
தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் அனுப்பர்பாளையம் பாத்திர தொழில் முடங்கியுள்ளது. இதனால் வேலைவாய்ப்பை இழந்து தொழிலாளர் குடும்பத்தினர் சிரமத்தில் தவித்து வருகிறார்கள்.
அனுப்பர்பாளையம் பாத்திரம்பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் தனி முத்திரை பதித்துள்ளது. அதுபோல் அனுப்பர்பாளையம் பகுதியில் உற்பத்தியாகும் பாத்திரங்களுக்கு தனி மவுசு உண்டு. அம்மாபாளையம், அங்கேரிப்பாளையம், செட்டிப்பாளையம், பள்ளிபாளையம், திருமுருகன்பூண்டி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 300–க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பாத்திர பட்டறைகள் உள்ளன. எவர்சில்வர், பித்தளை, செம்பு பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்கள் தமிழகம் முழுவதும், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
நாளொன்றுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள் 5 டன் அளவிலும், பித்தளை பாத்திரங்கள் 1 டன் அளவிலும், செம்பு பாத்திரங்கள் ½ டன் அளவிலும் உற்பத்தியாகிறது. இதன் மூலமாக நாளொன்றுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சம்பள ஒப்பந்தம்பாத்திர தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் போடப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டு வருவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சம்பள ஒப்பந்தம் கடந்த 31–12–2016 அன்று முடிந்து விட்டது. இதைத்தொடர்ந்து எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு சம்பள ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கத்தினர், பாத்திர உற்பத்தியாளர்களிடம் தெரிவித்தனர். எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்களிடம் 4 முறையும், பித்தளை, செம்பு பாத்திர உற்பத்தியாளர்களிடம் 3 முறையும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. அப்போது பித்தளை, செம்பு பாத்திர உற்பத்தியாளர்கள் ‘சிலாப் சிஸ்டம்’ என்ற முறையை தெரிவித்தனர். அதாவது 3 ஆண்டுகளுக்கான சம்பள உயர்வு சதவீதத்தை ஒவ்வொரு ஆண்டும் பிரித்து வழங்குவதாக கூறினார்கள். ஆனால் இதை தொழிற்சங்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
தொழிற்சங்கத்தின் தரப்பில் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு கடந்த ஆண்டு சம்பள ஒப்பந்தத்தில் இருந்து 50 சதவீதம் கூடுதலாகவும், பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு 70 சதவீதம் கூடுதலாகவும் சம்பளம் வழங்குமாறு கேட்டனர். ஆனால் பாத்திர உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு ஒப்பந்தத்தை விட குறைவாகவே வழங்க முடியும் என்று தெரிவித்தனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தம்இதனால் ஏ.டி.பி., எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., காமாட்சியம்மன் உலோக தொழில் சங்கம் ஆகியவை ஒன்று சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 26–ந்தேதி மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன. பின்னர் தொழிலாளர்துறை அதிகாரிகள் முன்னிலையில் 5 முறை பாத்திர உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத்தினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.
கடைசியாக நடந்த பேச்சுவார்த்தை முடிவில் எவர்சில்வர் பாத்திரத்துக்கு 16 சதவீதமும், பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு 20 சதவீதமும் சம்பள உயர்வு வழங்குவதாக பாத்திர உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டு ஒப்பந்தத்தை விட கூடுதலாக சம்பள உயர்வு ஒப்பந்தம் அமைய வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு எட்டப்படாமல் உள்ளது.
ரூ.19 கோடிக்கு உற்பத்தி பாதிப்புகடந்த 38 நாட்களாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சுமார் ரூ.19 கோடிக்கு பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தொழிலாளர்கள் கடும் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற ஆர்வத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.
இதுகுறித்து திலகர் நகரை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி கூறும்போது, 35 வருடமாக பாத்திர பட்டறையில் வேலை செய்து வருகிறேன். பாத்திர பட்டறைகளில் தற்போது 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடினமான வேலை என்பதாலும் உடலுழைப்பை அதிகம் செலுத்த வேண்டும் என்பதாலும் இந்த வேலை செய்ய புதிதாக யாரும் வருவது கிடையாது. சிரமப்பட்டு வேலை செய்தாலும் சம்பளம் குறைவாக உள்ளது. எனக்கு வேறு வேலை தெரியாததால் இந்த தொழிலிலேயே இருக்கிறேன். கடந்த சம்பள ஒப்பந்தத்தை விட கூடுதலாக சம்பள ஒப்பந்தம் அமைக்க வேண்டும். அப்போது தான் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை எங்களால் சமாளிக்க முடியும். அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையை விரைவில் முடித்து எங்களுக்கு வேலை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்றார்.
அனுப்பர்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி லட்சுமணன் கூறும்போது, சம்பள ஒப்பந்ததை விரைவில் அமைக்க வேண்டும். தொடர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாங்கள் வேலையிழந்துள்ளோம். வீட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியவில்லை. பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்க உள்ளன. குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்குவது, பள்ளி, கல்லூரிகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமத்தில் உள்ளோம் என்றார்.
முழு அடைப்புரங்கராஜ்(சி.ஐ.டி.யு.):–
கடந்த முறை அமைக்கப்பட்ட சம்பள ஒப்பந்தப்படி எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 25 சதவீதம், பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு 33.5 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. எதிர்வரும் 3 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டே சம்பள ஒப்பந்தம் அமைக்குமாறு பாத்திர உற்பத்தியாளர்களிடம் தெரிவித்தோம். ஆனால் கடந்த சம்பள ஒப்பந்தத்தை விட குறைந்த சதவீதத்தை கொடுப்பதாக தெரிவிக்கிறார்கள். இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 27 சதவீதமும், பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு 35 சதவீதமும் கூடுதலாக சம்பள ஒப்பந்தம் அமைந்தால் கூட போதும். நாளை(திங்கட்கிழமை) தொழிலாளர் துறை அதிகாரி முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் உடன்பாடு எட்டப்படுமா? என்பது தெரியவில்லை.
பாத்திர உற்பத்தியாளர்கள் இதற்கு முன் 2010–ம் ஆண்டு சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் 2 மாதம் தொடர் வேலைநிறுத்தம் நடந்தது. அதுபோல் 2013–ம் ஆண்டும் 58 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் நடந்தது. அதுபோல் இழுத்தடிக்காமல் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். சம்பள ஒப்பந்தத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் வருகிற 6–ந்தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளோம். இதற்கு அனைத்து கட்சியினரின் ஆதரவை கேட்டுள்ளோம். பாத்திரத்தொழில் நடைபெறும் செட்டிப்பாளையம், அனுப்பர்பாளையம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் இந்த முழு அடைப்பு போராட்டத்தால் அடைக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
நாளை பேச்சுவார்த்தைகதிரேசன்(எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம்):–
கடந்த காலங்களில் தொழில் சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சம்பளத்தை அதிகமாக கொடுக்க முடியவில்லை. குடிசை தொழில் போல் செய்து வருகிறோம். இந்த தொழிலுக்கு அரசு மின்கட்டண சலுகை உள்ளிட்ட எந்தவித சலுகையும் வழங்கவில்லை. எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 16 சதவீதமும், பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு 20 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளோம். கடந்த காலங்களை விட தற்போது 70 சதவீதம் தொழில் குறைந்து விட்டது. ஒரு கிலோ எடையுள்ள எவர்சில்வர் பாத்திரத்தை உற்பத்தி செய்வதற்கு சம்பளமாக ரூ.180 கொடுக்கிறோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கும் சம்பள உயர்வு கொடுத்தால் பாத்திரங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் வரும். அப்படி பாத்திரங்களின் விலையை உயர்த்தும் போது, சந்தையில் மற்ற ஊர்களில் இருந்து உற்பத்தியாகி வரும் பாத்திரங்களை விட திருப்பூர் பாத்திரங்களின் விலை அதிகமாக இருக்கும். இதனால் தொழில் பாதிக்கும். 5–ந் தேதி(நாளை) தொழிலாளர்துறை அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் எங்கள் தரப்பு கருத்தை தெரிவிப்போம்.
சம்பள ஒப்பந்தத்தை விரைவில் அமைத்து தங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க தொழிலாளர்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாத்திர தொழிலாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.