கடும் வறட்சியால் காய்ந்துபோன தென்னை மரங்கள்: விவசாயிகள் கவலை

தாராபுரத்தில் பகுதியில் கடும் வறட்சியால் காய்ந்துபோன தென்னை மரங்கள் விவசாயிகள் கவலை

Update: 2017-06-03 22:30 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் பெரும்பாலான பகுதிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. இதன் ஒரு பகுதியில் அமராவதி அணையின் புதிய ஆயக்கட்டு பாசனமும் மற்றொரு பகுதியில் பழைய ஆயக்கட்டு பாசனமும் நடைபெற்று வருகிறது. மேற்கு பகுதிகளில் பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத்திட்டத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் இங்குள்ள உப்பாறு அணையின் மூலம் ஒரு பகுதி பாசனம் பெற்று வந்தது.

உப்பாறு அணைக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாமல் போனதால், அணைக்கு உட்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் நிலமும், மறைமுகமாக பாசனம் பெற்று வந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலமும் தரிசாகி விட்டன.

நல்லதங்காள் ஓடை தடுப்பணை

தாராபுரம் கிழக்கு பகுதியில் நல்லதங்காள் ஓடை தடுப்பணையின் மூலம் பாசனம் ஏற்படுத்தப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 700 ஏக்கர் பாசனம் இருந்து வருகிறது. இது தவிர நிலத்தடி நீரை நம்பி பரவலாக கிணற்றுப்பாசனம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கிணற்றுப் பாசனங்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை உருவானது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதை தெரிந்து கொண்ட விவசாயிகள் குறுகிய கால சாகுபடியில் இருந்து நீண்ட கால சாகுபடிக்கு மாறிவிட்டார்கள். அதன் விளைவாக தென்னை சாகுபடி இங்கு அதிகரித்து விட்டது. குறைவான தண்ணீரைக் கொண்டு சொட்டு நீர் பாசன அடிப்படையில் தென்னை விவசாயம் நடைபெற்று வந்தது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:–

தென்னை மரங்கள்

இந்த நிலையில் தற்போது கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதால் கிணற்று பாசனத்தை நம்பியிருந்த தென்னை விவசாயம் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுவிட்டது. தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக குறைந்தது 10 முதல் 20 ஆண்டுகள் வரை வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் காய்ந்து கருகி கொண்டிருக்கிறது. இதனால் தென்னை விவசாயிகள் பெரிய இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வறட்சி நீடிக்கும் பட்சத்தில் மீதமுள்ள தென்னை மரங்களும் காய்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளை அதிகாரிகள் கணக்கெடுத்து அவர்களுக்கு அரசு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

தென்னை மரங்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்