தினகரனை வரவேற்க செல்லாதது ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தினகரனை வரவேற்க செல்லாதது ஏன் என்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு அமைச்சர் செங்கோட்டையன் நேற்று காலை சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோவில் அலுவலர்கள் பிரசாதம் வழங்கி கவுரவித்தனர். அதன் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரசுபணிகள் அதிகமாக இருப்பதால் நான் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரனை வரவேற்க செல்லவில்லை.
முதல்–அமைச்சர் முடிவெடுப்பார்தினகரன் கட்சி பணிகளில் ஈடுபடுவது குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.
தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டம் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில் குளறுபடிகள் நடந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் இந்த திட்டத்தின் நோக்கமே ஏழை மக்களின் குழந்தைகள் நல்ல கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்பதுதான். வெயிலின் தாக்கத்தை பொறுத்து மாவட்ட கலெக்டர்களின் பரிந்துரையின் பேரில் பள்ளி திறப்பு தேதியை மாற்றி கொள்ள அனுமதிக்கப்படும். பள்ளி திறக்கப்பட்ட அன்றே மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் கோ.அரி எம்.பி., பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ., திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட பால்வளத்தலைவர் வேலஞ்சேரி சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.