ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணி தீவிரம்

தா.பழூர் ஒன்றியத்தில் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2017-06-03 22:45 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை விவசாயம், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்வதற்காக பொதுமக்கள் இலவசமாக எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்களில் பொக்லைன் எந்திரம் கொண்டு வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தா.பழூர் ஒன்றியத்தில் இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

33 ஊராட்சிகளில்

அதன்படி தா.பழூர் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் தா.பழூர் வண்ணான் ஏரி, எமனேரி, மயிலைபுள்ளை சாவடி ஏரி, கீழமிக்கேல்பட்டி, கோட்டியால், நாயகணைப்பிரியால், பொற்பதிந்தநல்லூர், காரைக்குறிச்சி, மதனத்தூர், அணைக்குடம், சுத்தமல்லி, சுந்தரேசபுரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணிகளை விவசாயிகள் தீவிரப் படுத்தி உள்ளனர்.

கோரிக்கை

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி, குளங்கள் தூர்வாரப்படாமல் வற்றி கிடந்தன. தற்போது அரசு அனுமதியோடு நடைபெறும் இத்திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள் நன்கு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்க முடியும். இதேபோன்று தா.பழூர் பகுதியிலுள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும் என்றும், தா.பழூர் பகுதியில் வண்டல் மண் எடுப்பதற்கு யாரிடம், எப்படி அனுகுவது என்பது பற்றிய விவரம் இன்னும் பல விவசாயிகளுக்கு முழுமையாக தெரியவில்லை. எனவே இதுபற்றி ஒவ்வொரு கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி விவசாயிகளிடம் மனுக்களை பெற வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத் துள்ளனர்.

மேலும் செய்திகள்