மின்மோட்டார்பொருத்தி தண்ணீரை உறிஞ்சிய வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தஞ்சையில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சிய வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2017-06-03 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தஞ்சை மாநகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்பொருத்தி குடிநீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளும் இதனை கண்காணித்து மோட்டார்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தஞ்சை சேப்பனாவாரி வடகரை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சரிவரகுடிநீர் வரவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்த போது ஒரு வீட்டில் குடிநீர் குழாய் இணைப்பில் மின்மோட்டார்பொருத்தி குடிநீர் உறிஞ்சியது தெரிய வந்தது.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் வரதராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய மின் மோட்டாரை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டின் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர்.

மேலும் செய்திகள்