ஐஸ் கம்பெனி அமைக்க பெண்ணிடம் ரூ.64 லட்சம் வாங்கி மோசடி உறவினர் கைது

குளச்சல் அருகே, ஐஸ் கம்பெனி அமைக்க பெண்ணிடம் ரூ.64 லட்சம் வாங்கி மோசடி செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-03 22:15 GMT
நாகர்கோவில்,

குளச்சல் அருகே பள்ளிவிளாகம் பகுதியில் உள்ள தளவாய்புரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் பீட்டர் வின்சென்ட் (வயது 58), வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜஸ்டின்ராணி. இவர் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், என் தங்கையின் கணவர் மைக்கேல்ராஜ் (48). இவர், குளச்சல் வாணியக்குடியில் 23 சென்ட் நிலத்தை வாங்கி அதில் ஐஸ் கம்பெனி அமைக்க என்னிடம் பணம் கேட்டார். நிலத்தை வாங்கியவுடன் அதில் ஐஸ் கம்பெனி அமைத்து அதன் மூலம் வரும் லாபத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைவார்த்தை கூறி என்னிடம் ரூ.64 லட்சத்து 12 ஆயிரத்து 157 வாங்கினார்.

கைது

அதன்படி வாங்கிய நிலத்தை என் பெயரில் கிரயம் செய்து கொடுத்தார். ஆனால் மின் இணைப்பு, கட்டிட அனுமதி ஆகியவற்றுக்கு எல்லாம் அவரது பெயரிலேயே அனுமதி பெற்றார். அதை எனது பெயருக்கு மாற்றவில்லை. மேலும் ஐஸ் கம்பெனி மூலம் வந்த வருவாயில் எனக்கு பங்கு தரவில்லை. என்னிடம் இருந்து பணத்தை ஏமாற்றி வாங்கி மோசடி செய்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்ற பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவிட்டார். அதன்படி மைக்கேல்ராஜ் மீது மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்