வருசநாடு மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் நடந்து சென்ற மர்ம மனிதர்கள்? போலீசார் விசாரணை

வருசநாடு மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் நடந்து சென்ற மர்ம மனிதர்கள் மாவோயிஸ்டுகளா? என்று போலீசார் விசாரணை;

Update: 2017-06-03 21:42 GMT

கடமலைக்குண்டு,

வருசநாடு மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் நடந்து சென்ற மர்ம மனிதர்கள் மாவோயிஸ்டுகளா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்ம நபர்கள்

கடந்த 2007–ம் ஆண்டு வருசநாடு அருகே மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 5 மாவோயிஸ்டுகளை கைது செய்தனர். இதையொட்டி வருசநாடு மலைப்பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடமலை–மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே மேல்வாலிப்பாறை மலைப்பகுதியில் சிலர் இரவு நேரத்தில் துப்பாக்கிகளுடன் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தேடுதல் வேட்டை

அதனைத்தொடர்ந்து நேற்று தேனி நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மேல்வாலிப்பாறை மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் மாறு வேடங்களிலும் கிராம பகுதிகளுக்கு சென்று நக்சல் நடமாட்டம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் வருசநாடு மலைப்பகுதியில் மீண்டும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டார்களோ? என்று பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்