மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற பஸ் மீது லாரி மோதல்; பள்ளி மாணவி உள்பட 3 பேர் பலி

மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-06-03 21:40 GMT

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் நேற்று காலை மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரம் அருகே பழுதாகி நின்றது.

அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி மணல் ஏற்றி கொண்டு வந்த லாரி பழுதாகி நின்ற அரசு பஸ்சின் பின்னால் மோதியது.

சாவு

இதில் பஸ்சில் பயணம் செய்த வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள குவளை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 50), உத்திரமேரூரை அடுத்த அரும்புளியூரை சேர்ந்த இலக்கியா (10) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் இலக்கியா 4–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5–ம் வகுப்பு செல்ல இருந்தார்.

இந்த விபத்தில் இலக்கியாவின் தாய் உமா மகேஸ்வரி, மதுராந்தகத்தை அடுத்த காந்திநகரை சேர்ந்த மேரிலிலிதா (36), செய்யூரை அடுத்த மருதேரியை சேர்ந்த அன்னம்மாள் (70), செங்கல்பட்டை அடுத்த உதயம்பாக்கத்தை சேர்ந்த மஞ்சுளா (45), மதுராந்தகத்தை அடுத்த எல்.எண்டத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் (20), தண்டலத்தை சேர்ந்த சச்சுதானந்தன் (22), கானாத்தூரை சேர்ந்த செல்லன் (45), எம்புளியை சேர்ந்த லோகநாதன் (32) உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேரிலிலிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

லாரி டிரைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து படாளம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர்குமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து தப்பிஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.


மேலும் செய்திகள்