மத்திய அரசை கண்டித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது
இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
விழுப்புரம்,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த தடையை நீக்கக்கோரியும் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் புரட்சிகர மாணவர்– இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் விழுப்புரம் அமைப்புக்குழு செயலாளர் ஞானவேல்ராஜா தலைமை தாங்கினார். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி இணை செயலாளர் லோகநாதன் கண்டன உரையாற்றினார். இதில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாநில பொருளாளர் சங்கர், துணைத்தலைவர் மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.