தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி தகவல்
கோவை,
தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி கூறினார்.
நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சீருடைதமிழக–கேரள எல்லையில் கோவை மாவட்டத்தையொட்டி உள்ள பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக நக்சல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. அந்த பிரிவில் 40 போலீசார் உள்ளனர். அவர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக நக்சல் பிரிவு போலீசாருக்கு காலணிகள் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில், ரவுண்ட்டேபிள் பெண்டா 101, ரவுண்ட்டேபிள் 9 ஆகியவற்றின் நிர்வாகிகள் நக்சல் தடுப்பு பிரிவினருக்காக ரூ.1 லட்சம் மதிப்புள்ள காலணிகள், சீருடைகளை போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதியிடம் வழங்கினர். இதை நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி வழங்கினார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி நிருபர்களிடம் கூறியதாவது–
கல்வி, மருத்துவ வசதிகோவை மாவட்டத்தின் தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கட்டுப் படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு போலீஸ் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் பல்வேறு உபகரணங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு காலணிகள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் சூப்பிரண்டு முத்தரசு, போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசலு உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.