தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தொடர் விடுமுறை காரணமாக, ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Update: 2017-06-03 22:30 GMT

ஊட்டி,

ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா அணை, சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். நடந்து முடிந்த மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால், தற்போது ஊட்டியிலும் மழை பெய்யத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி, ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

சுற்றுலா பயணிகள்

தற்போது இங்கு 10 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் பயணம் செய்ய ரூ.680–ம், 4 இருக்கைகள் கொண்ட மிதி படகில் பயணம் செய்ய ரூ.260–ம், 5 இருக்கைகள் கொண்ட துடுப்பு படகில் பயணம் செய்ய ரூ.300–ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படகு சவாரியின் போது, சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த மரங்களையும், மான் பூங்காவில் உள்ள கடாமான்களையும், ஏரி கரையோரம் மரங்களில அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசிக்கின்றனர். பசுமையான மரங்களுக்கு நடுவே படகு சவாரி மேற்கொள்வது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக படகு இல்லத்தில் மினி ரெயில், டோரா–டோரா, ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர்.

அனுமதிக்கக்கூடாது

படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் படகு சவாரியின் போது, படகில் புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவசம் கொடுத்தாலும், அதனை அணியாமல் படகின் ஓரத்தில் வைத்து விடுகின்றனர். பாதுகாப்பு கவசம் அணியாமல் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்