2 அம்பேத்கர்: தனித்தொகுதிக்கான போராட்டம்

பரோடா மன்னர் வரி வருவாய் அதிகாரி வேலை கொடுத்துவிட்டார். அலுவலகத்தில் அம்பேத்கருக்கு நித்தமும் அவமரியாதைகளே கிடைத்தன.

Update: 2017-06-03 06:26 GMT
ரோடா மன்னர் வரி வருவாய் அதிகாரி வேலை கொடுத்துவிட்டார். அலுவலகத்தில் அம்பேத்கருக்கு நித்தமும் அவமரியாதைகளே கிடைத்தன. உதவியாளர்களாக இருந்தவர்கள் கூட அவரைக் கேவலமாக நடத்தினர். தண்ணீர் கொடுக்க மறுத்தார்கள். கோப்புகளைக் கேட்டால், மேசை மீது தூக்கி வீசி விட்டுப் போவார்கள்.

சின்ன வயதில் இருந்தே இதையெல்லாம் பார்த்துவிட்டதால் பொறுத்துக்கொண்டார். எனினும் பரோடாவில் தங்குவதற்கு அவருக்கு வீடு கிடைக்கவில்லை. பார்சி மொழி (பாரசீகம்) தெரிந்ததால் தான் அந்த இனத்தவர் என்று சொல்லி ஒரு வீட்டில் தங்கி இருந்தார். சில நாட்களில் அதைக் கண்டுபிடித்து விட்ட உயர் வகுப்பினர், அவரை வெளியேற வேண்டும் என மிரட்டினர்.

மன்னரைப் பார்த்து நடந்ததைச் சொன்னார். அவரோ, ‘என்னால் முடிந்தவற்றை செய்திருக்கிறேன். பாகுபாடுகள் புரையோடிப் போய்க்கிடக்கின்றன. ஒரே நாளில் அவற்றை மாற்ற முடியாது’ என்று கூறிவிட்டார்.

வேறுவழியின்றி அந்த வேலையில் இருந்து அம்பேத்கர் விலகினார்.

டியூசன் சொல்லிக்கொடுத்தார். கணக்காளராக வேலை செய்தார். தொழில் மேம்பாட்டுக்கான ஆலோசகராக இருந்தார். எதிலுமே அவரால் குடும்பச் செலவுகளுக்கு வேண்டிய பணத்தை ஈட்ட முடியவில்லை. அத்தனைக்கும் அவர் ‘தீண்டத்தகாதவர்’ என்பதே காரணமாக இருந்தது. அதை வைத்தே அவரிடம் யாரும் வரவில்லை.

மும்பை சிடன்ஹம் பொருளாதார கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கேயும் தீண்டாமை அவரைத் தொடர்ந்தது. சக பேராசிரியர்கள் மட்டுமல்ல; மாணவர்களும் அவரை மோசமாக உதாசீனப்படுத்தினார்கள்.

இந்தக் காலக்கட்டத்தில் தாங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை உணராமல் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவூட்டும் வேலைகளில் இறங்கினார். ‘பிள்ளைகளைத் தவறாமல் படிக்க வையுங்கள்’ என்று முழங்கினார். அவர் களுக்காக ‘ஊமைகளின் தலைவன்’ என்ற பொருள் தரும் ‘மூக் நாயக்’ எனும் பத்திரிகையைத் தொடங்கினார்.

அம்பேத்கரின் அறிவுக்கூர்மையை உணர்ந்திருந்த கோல்காபூர் மன்னர் சாகு மகராஜ், வெளிநாடு சென்று உயர் படிப்பைத் தொடர உதவினார். சத்ரபதி சிவாஜி வம்சத்தைச் சேர்ந்த சாகுமகராஜ் வித்தியாசமான மன்னராக, கீழ்த்தட்டு மக்கள் கல்வி கற்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வந்தார். அவரின் உதவியை நன்றியோடு ஏற்றுக்கொண்ட அம்பேத்கர் மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கே பாதியிலேயே விட்டு வந்த ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டம் வாங்கினார்.

அங்கிருந்து லண்டனுக்குப் போனார். ஒரே நேரத்தில் சட்டமும், பொருளாதாரமும் படிக்க தனித்தனி கல்லூரிகளில் சேர்ந்தார். அம்பேத்கரின் வெறித்தனமான உழைப்பைப் பார்த்து சக மாணவர்கள் வியந்தனர். இந்தியாவில் சாதி வெறியைப் போல அங்கே நிற வெறி, இன வெறி இருந்தது.

ஏற்கனவே ஒட்டுமொத்த இந்தியர்களையும் நாயினும் கீழாக பார்த்து பழகிய வெள்ளைக்காரர்கள், சட்டம் படிக்க வந்த அம்பேத்கரையும் அவ்வப்போது சீண்டிக்கொண்டு இருந்தனர். அத்தனையையும் கடந்து பாரீஸ்டர் பட்டமும், எம்.எஸ்ஸி., பட்டமும் பெற்றார். ‘ரூபாய் பற்றிய பிரச்சினைகள்’ என்ற பொருளாதார ஆய்வுக்காக டி.எஸ்ஸி., (டாக்டர் ஆஃப் சயின்ஸ்) என்ற உயரிய பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்திய தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முதல் பாரீஸ்டர் என்ற பெருமையோடு மும்பை வந்து இறங்கினார்.

எத்தனை பட்டங்கள் வாங்கி என்ன செய்வது? இந்தியாவில் வக்கீல் தொழில் செய்வது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஒவ்வொரு நிலையிலும், ‘நீ எந்த இடத்திற்கு வந்தாலும் தாழ்த்தப்பட்டவன் தான்’ என்று இந்த சமூகம் முகத்தில் அடித்துச் சொல்லிக் கொண்டே இருந்தது.

தாழ்த்தப்பட்ட சமூக மக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு கற்பிப்பதன் மூலமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்பினார். அதற்காக ஊர், ஊராக சென்று தம் மக்களிடம் பேசினார். மும்பை நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி சவுதார் என்ற இடத்தில் உள்ள பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்கலாம் என்று கூறியிருந்தது. ஆனால் குளம் இருக்கும் பக்கம் கூட அவர்களால் செல்ல முடியவில்லை.

ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டிய அம்பேத்கர் அந்த குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்தார். இதனால் குளமே களங்கப்பட்டு விட்டது என்று கூறி உயர் வகுப்பினர் மந்திரங்களை ஓதி தீட்டுக் கழித்தனர். இதைத் தொடர்ந்து நாசிக் நகரிலுள்ள ராமர் கோவில் நுழைவுப் போராட்டத்தையும் அம்பேத்கர் முன்னெடுத்தார். ஆனால் நாட்கணக்கில் போராடியும் கோவிலுக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. தேரோட்டத்தில் பங்கேற்கவும் முடியவில்லை. மாறாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கர் உருவெடுத்தார். சுயாட்சி உள்ளிட்ட இந்தியர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காக பிரிட்டனில் கூட்டப்பட்ட வட்டமேசை மாநாடுகளுக்கு ஆங்கிலேய அரசால் அவர் அழைக்கப்பட்டார்.

முதல் மாநாட்டில் ‘பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கள் தொகையில் அடிமைகளாக, கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள ஐந்தில் ஒரு பங்கு மக்களின் சார்பில் பேசுகிறேன்’ என்று அவர் பேச்சைத் தொடங்கியதுமே பிரிட்டிஷ் பிரதமர் உள்ளிட்டோர் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

‘ஆங்கிலேயரின் ஆட்சியால் பல நூறாண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கும் மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை’ என்று அவர் வரிசையாக பட்டியலிட்டார். ‘எல்லா மக்களையும் சமமாக நடத்தி, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் முழுமையான அரசியல் சட்டம் இந்தியாவுக்கு வேண்டும்’ என்றார்.

இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக 1928-ல் காங்கிரஸ் கட்சி அமைத்த மோதிலால் நேரு குழுவின் வரைவு அறிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்பதை மனதில் கொண்டே அம்பேத்கர் அப்படியொரு கருத்தை முன் வைத்தார்.

அவரின் உணர்ச்சிகரமான, அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமான பேச்சு பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டொனால்டைக் கவர்ந்தது. பிரதமரின் மகள் முக்கியமானவர்களுக்கு மட்டும் அளித்த சிறப்பு விருந்திற்கு அம்பேத்கர் அழைக்கப்பட்டார். அவரைப் படிக்க வைத்த பரோடா மன்னர் உள்ளிட்டோர் அந்த விருந்தில் பங்கேற்ற மற்ற பிரபலங்கள்.

பேச்சு மட்டுமின்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டிய ‘தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் பிரகடனம்’ ஒன்றைத் தயாரித்து பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கினார். மற்றவர்களைப் போல சமமான குடியுரிமை, தீண்டாமை ஒழிப்பு, வேலைகளில் போதுமான வாய்ப்பு இவற்றோடு தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வகையில் தனித்தொகுதிகள் என்பது அதன் முக்கிய அம்சம்.

பிரிட்டன் பத்திரிகைகள் அம்பேத்கரின் பேச்சையும் பேட்டிகளையும் பிரசுரித்தன. இந்தியாவிலோ வழக்கம் போல இருட்டடிப்புதான்.

முதல் மாநாட்டில் பங்கேற்காத காந்தியடிகள் 1931-ல் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார். இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கர் அழைக்கப்பட்டதற்கு காந்தி வெளிப்படையாகவே கண்டனத்தைப் பதிவு செய்தார். ‘இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்குமான பிரதி நிதித்துவ கட்சி காங்கிரஸ் தான். தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை பற்றி வேறெந்த அமைப்பை விடவும் காங்கிரசுக்கு அதிக அக்கறை உண்டு’ என்றார்.

‘பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்கள் காந்தியானாலும் சரி, காங்கிரசானாலும் சரி, அவர்கள் முழு அதிகாரம் பெற்றவர்கள் அல்லர். அவர்களின் கருத்து நிச்சயமாக எங்களைக் கட்டுப்படுத்தாது’ என்று அம்பேத்கர் பதிலடி கொடுக்க, இருவருக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது.

‘இந்து மதத்தைப் பிளவுபடுத்தி தாழ்த்தப்பட்ட மக்களைத் தனியாக பிரித்து தனி தொகுதிகளை வழங்குவது நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும்’ என்று காந்தி சொன்னார். முடிவில் சிறுபான்மை மக்களுக்காக அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கையெழுத்திடுமாறு பிரிட்டன் பிரதமர் இருவரையும் கேட்டுக்கொண்டார்.

காந்தி ஒப்புக்கொண்டார். என்ன முடிவு என்பது தெரியாமல் கையெழுத்திட அம்பேத்கர் மறுத்தார். எனினும் அரசின் முடிவு அம்பேத்கருக்குச் சாதகமாக வந்தது.

அதற்கு மகாத்மா காந்தி ஆற்றிய எதிர்வினை என்ன? மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவு நனவாகாமல் போனது ஏன்?

(ரகசியங்கள் அடுத்த வாரம் தொடரும்).

முதல் மனைவி ரமாபாய் உடன் அம்பேத்கர். அருகில் மகன் யஸ்வந்த் ராவ் இருக்கிறார். அம்பேத்கர் உடன் அவரது வளர்ப்பு நாய் எப்போதும் இருக்கும். புகைப்படம் எடுக்கும் போதும் வளர்ப்பு நாயுடன் படம் எடுத்துக்கொள்வது அம்பேத்கர் வழக்கம். அதுபோல இங்குள்ள படத்தில் அவரது வளர்ப்பு நாய் ‘டாப்பி’ உள்ளது.


திருமணத்திற்காக செலுத்திய அபராதம்!


ளமையிலேயே திருமணம் செய்து வைப்பது அக்காலத்தில் வழக்கம். அம்பேத்கருக்கு 16 வயதிருக்கும் போது, ஒன்பது வயதான சிறுமி ரமாபாய் என்பவரை அவருக்கு மணம் பேசி முடித்தனர். டபோலி என்ற இடத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளி ஒருவரின் இரண்டாவது மகள் ரமாபாய். அம்பேத்கருக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. ‘திருமணத்தில் விருப்பமில்லை’ என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

பேசி முடித்த பெண்ணை வேண்டாம் என்றால் விடுவார்களா? விவகாரம் பஞ்சாயத்துக்குப் போனது. அதில் அம்பேத்கருக்கு 5 ரூபாய் அபராதமும், அதே பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது.

மும்பையிலுள்ள பைகுலா மார்க்கெட்டிலுள்ள கொட்டகை ஒன்றில், மீன் கழுவிய தண்ணீர் ஓரத்தில் தேங்கிக்கிடக்க, அம்பேத்கருக்கும் ரமாபாய்க்கும் திருமணமும் விருந்தும் முன்னிரவு நேரத்தில் நடந்தது.

மேலும் செய்திகள்