கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையை செய்யுங்கள்-நேர்காணல் அனுபவங்கள்

படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் கூட நேர் காணல் எனும் தேர்வை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்.

Update: 2017-06-03 06:10 GMT
டிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் கூட நேர் காணல் எனும் தேர்வை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள். நேர்காணலில் என்ன மாதிரியான கேள்விகள் கேட்பார்கள்?, நம்மால் சரிவர பதிலளிக்க முடியுமா?, சுயவிவர பட்டியலில் எத்தகைய விவரங்களை குறிப்பிட வேண்டும்?, ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் தடுமாற்றமின்றி பேச முடியுமா? என பல கேள்விகள் துளைத்தெடுக்கும்.

நேர்காணலுக்கு செல்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை பிரபல ஐ.டி.நிறுவனத்தின் சென்னை மண்டல மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுஜித் குமார் விளக்குகிறார்.

நேர்காணல் பதைப்பதைக்கும் தருணமா?

இல்லை. தேர்வாளரின் முன்னிலையில் நடக்கும் திறமை நாடகம். அதில் நீங்கள் யார் என்பதை சரிவர நடித்து காண்பிக்கவேண்டும். அதுதான் நேர்காணல்.

சுயவிவர பட்டியல் எப்படி இருக்கவேண்டும்?

விண்ணப்பிப்பவர்களின் விவரங்கள் சுருக்கமாக இருப்பதே சுயவிவர பட்டியல். அதனால் முடிந்தவரை இரண்டு பக்கங்களுக்குள் விவரங்களை குறிப்பிட்டு விடவேண்டும். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரி மதிப்பெண்கள் என கல்வி விவரத்தை கீழிருந்து மேலாகவும் அல்லது மேலிருந்து கீழாகவும் பதிவு செய்யலாம். உங்களுக்கு நன்றாக தெரிந்த மென்பொருட்களையும், பாடத்திட்டங் களையும் மட்டும் பதிவு செய்யுங்கள். என்ன விளையாடுவீர்களோ, என்ன படிப்பீர்களோ, என்ன செய்வீர்களோ அதை மட்டும் பதிவு செய்யுங்கள். உங்களது கைப்பேசி எண், ஈ-மெயில் முகவரி, வீட்டு முகவரி... ஆகியவற்றை தவறாமல் பதிவு செய்யுங்கள். முடிந்தவரை புகைப்படங்களை தவிர்ப்பது நல்லது.

நேர்காணலுக்கு எப்படி தயாராவது?

பெரும்பாலான மாணவர்கள் நேர்காணலின் அறிமுக சுற்றிலேயே வெளியேறிவிடுகிறார்கள். அறிமுக சுற்று மிகவும் எளிமையானது. நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்தும் சுற்று. முன்னரே சொன்னபடி நேர்காணல் என்பது நாடகம். அதில் உங்களுக்கான வசனங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் யார், எப்படிப்பட்டவர், இதற்கு முன்பாக எங்கு பணியாற்றினீர்கள், ஏன் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள், என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது... இதுபோன்ற வாய்மொழி கேள்விகளுடன், பிடித்தமான தலைப்புகளில் ஒரு கட்டுரை எழுத சொல்வார்கள். ஐ.டி.துறை நேர்காணலில், அதிகபட்சமாக இத்தகைய கேள்விகள்தான் இடம்பெறும். ஆனால் இந்த கேள்விகளுக்கு கூட மாணவர்கள் தடுமாறுவது தான் சோகம் கலந்த உண்மை.

நேர்காணலில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

நேர்காணலை நடத்தும் நிறுவனத்தின் தகவல்களை சேகரித்து கொள்ளுங்கள். எப்படிப்பட்ட நிறுவனம், எத்தனை மையங்கள் இருக்கிறது, பங்குச் சந்தை விவரம்... போன்ற விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது. அடுத்ததாக அறிவிப்பு வெளியாகி இருக்கும் பணியிட விவரத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் என்ன பணியிடத்திற்கு விண்ணப்பித்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே நிறைய பேர், நேர்காணலுக்கு வந்துவிடுவார்கள். அந்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். பொழுதுபோக்கு, கூடுதல் படிப்பு விவரங்களை சரிவர குறிப்பிடுங்கள். ஏனெனில் உங்கள் மீதான நம்பகத்தன்மை அங்கு தான் வலுவிழுந்துபோகும். பழக்கம் இல்லாத விளையாட்டுகளையும், பரீட்சயமில்லாத மென்பொருட்களையும் பட்டியலிட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள். இதனுடன் சிகை அலங்காரம், உடை அலங்காரம் சரிவர இருந்தால்... நிச்சயம் பணி அழைப்பாணையுடன் தான் வீடு திரும்புவீர்கள்.

இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?

எல்லா துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. வங்கி, பொதுதுறை நிறுவனங்கள், ஐ.டி.கம்பெனிகள் என எல்லா துறைகளும் ஆட்களை நிரப்பிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சரியான வாய்ப்புகளை தேடிப்பிடிக்கும் ஆர்வம் தான் மாணவர்களிடையே குறைந்துவிட்டது. கிடைத்த வேலையை பார்ப்பதற்கும், பிடித்த வேலையை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முடிந்தவரை படித்த துறையிலும், பிடித்த துறையிலும் வேலை தேடிக்கொள்ளவேண்டும். பிடித்தமான வேலையில் சம்பளம் குறைவாக இருந்தாலும், மனநிறைவாக இருக்கும்.

ஆங்கிலத்தில் தடுமாறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்?

ஐ.டி.துறைக்கு மட்டுமல்ல... எல்லா துறைகளிலும் ஆங்கிலம் அவசியமாகும். பேசுவதை புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும் அளவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலே போதுமானது. நண்பர் களுடன் ஆங்கிலம் பேசி பழகுங்கள். ஆங்கில பத்திரிகைகளை வாசியுங்கள். ஆங்கில திரைப்படங்களை சப்-டைட்டிலுடன் பாருங்கள். இதைவிட சிறந்த பயிற்சி வேறு எந்த மையங்களிலும் கிடைக்காது.

வேலை தேடுபவர்களுக்கு உங்களுடைய அனுபவ அறிவுரை?

தோல்வியில் தான் வெற்றியின் ரகசியம் மறைந் திருக்கிறது. நேர்காணலில் தோற்றுவிட்டோம் என்பதை விட நிறுவன எதிர்பார்ப்பிற்கு நாம் பொருந்தவில்லை என்று தான் எண்ண வேண்டும். என்ன தவறு செய்தோம் என்பதை தேடிப்பிடியுங்கள். எந்த சுற்றில் கவனமுடன் செயல்பட வேண்டும். எந்த சுற்றை எளிதாக வென்றோம் என்பதை கணக்கிட்டு அடுத்த நேர்காணலுக்கு தயாராகுங்கள். அரசு வேலை முதல் ஐ.டி. வேலை வரை ஆங்கிலம் தேவைப்படுகிறது. அதனால் ஆங்கிலத்தை உதாசீனப்படுத்தி விடாமல், கற்றுக்கொள்ளுங்கள். அது வேலைக்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் பயன்படும்.

மேலும் செய்திகள்