ஒரு வாரத்திற்குள் மணல் தட்டுப்பாட்டை தீர்க்காவிட்டால் போராட்டம் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் பேட்டி

மணல் குவாரிகள் மூடப்பட்டதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-06-02 23:53 GMT

சேலம்,

ஒரு வாரத்திற்குள் மணல் தட்டுப்பாட்டை தீர்க்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் கண்ணையன் தெரிவித்தார்.

அவசர செயற்குழு கூட்டம்

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மணல் தட்டுப்பாடு பற்றி விவாதிக்கப்பட்டதுடன் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

பின்னர் சங்க செயலாளர் கண்ணையன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் 60 இடங்களில் அரசு மணல் குவாரிகள் இருந்தன. இதில் தற்போது 5 அல்லது 6 மணல் குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தினமும் 150 லோடு மணல் மட்டுமே அனுப்பப்படுகிறது. அதுவும் உள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பிரமுகர்களே 100 லோடு மணல் எடுத்து செல்கின்றனர். மற்ற மாவட்டங்களுக்கு 50 லோடு மணல் கிடைக்கிறது.

கட்டுமான பணிகள்

சேலம் மாவட்டத்திற்கு ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால் கடந்த 35 நாட்களாக ஒரு லோடு மணல் கூட இங்கு வரவில்லை. மணல் குவாரிகள் மூடப்பட்டதால் கட்டுமான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஈடுபடும் கட்டிட தொழிலாளர்கள், கம்பி கட்டுபவர்கள், கட்டிட மேஸ்திரிகள், பொறியாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.12 ஆயிரத்துக்கு விற்ற ஒரு லோடு மணல் தற்போது ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் பிரமுகர்கள் லாரிகளுக்கு முன்னுரிமை என்ற முறையை ரத்து செய்து அனைத்து லாரிகளுக்கும் ஒரே விலை, ஒரே வரிசை, ஒரே அளவுப்படி மணல் வழங்க வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துவதை தடுக்க வேண்டும்.

போராட்டம்

மூடப்பட்ட மணல் குவாரிகளை உடனே திறந்து ஒருவாரத்திற்குள் மணல் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும். இல்லையெனில் கட்டிட தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், பொறியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் திரட்டி வந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கண்ணையன், ‘மணல் குவாரிகளில் இருந்து வாகனங்களில் மணல் ஏற்றும் ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் மணல் சீராக கிடைக்கும்‘ என்றார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சக நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்