சீரான குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே, சீரான குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-06-02 23:46 GMT

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட இதயப்பட்டி பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் சேலம் கருமந்துறை சாலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சீரான குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏத்தாப்பூர் போலீசார் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஒன்றிய ஆணையாளரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து 8 மணியளவில் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர். இதயப்பட்டி புதூரிலும் கடந்த வாரம் குடிநீர் கேட்டு சாலைமறியல் நடந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்