சொகுசு கார்கள் கடத்தல் வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு

சொகுசு கார்கள் கடத்தல் வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் பிறப்பித்தார்.

Update: 2017-06-02 23:40 GMT

சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டி – பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள ஒரு கார் பழுதுபார்க்கும் பட்டறையில் அருணாசலம் என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 17–ந் தேதி பட்டறைக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் சிலர் அருணாசலத்தை தாக்கி விட்டு அங்கிருந்த 2 சொகுசு கார்களை திருடிச்சென்று விட்டனர்.

இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார் திருட்டு தொடர்பாக நெல்லை மாவட்டம் சாந்திநகரை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் (வயது 29), பாளையங்கோட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (29), சேரன்மாதேவியை சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோரை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

கைதான முகைதீன் அப்துல் காதர், கொண்டலாம்பட்டியை சேர்ந்த ஆனந்தவேல் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் சேலம் பழைய பஸ்நிலையத்தில் தள்ளுவண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்து வந்த கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பாண்டியனை மிரட்டி பணம் பறித்துள்ளதாக சேலம் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த முகைதீன் அப்துல் காதர், கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (கொண்டலாம்பட்டி), குமார் (சேலம் நகர குற்றப்பிரிவு) ஆகியோர் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்று முகைதீன் அப்துல் காதர், கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் நேற்று உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்