குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

அலங்காநத்தத்தில் குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் செய்தனர்.

Update: 2017-06-02 23:18 GMT

எருமப்பட்டி,

எருமப்பட்டி அடுத்த அலங்காநத்தம் பஸ் நிறுத்தம் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். எனவே அங்கு குடிநீர் வினியோகம் செய்யுமாறு கேட்டு பொதுமக்கள் அலங்காநத்தம் பஸ்நிறுத்தம் அருகே துறையூர் மெயின் ரோட்டில் நேற்று காலை காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதே போல அலங்காநத்தம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் குடிநீர் கேட்டு நேற்று காலை துறையூர் மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அலங்காநத்தத்தில் ஒரே நாளில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதையொட்டி துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு வரும் பஸ்கள் காளிசெட்டிப்பட்டி, தூசூர் வழியாக திருப்பிவிடப்பட்டது.

கலைந்து சென்றனர்

இதுகுறித்த தகவல் அறிந்ததும் எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகர், கமலகண்ணன் மற்றும் எருமப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் அலங்காநத்தம் பஸ்நிறுத்தம் பகுதிக்கும், இந்திரா காலனி பகுதிக்கும் சென்று சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து 2 இடங்களிலும் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்