மின்வாரிய அதிகாரிகளை கண்டித்த மந்திரி டி.கே.சிவக்குமார்
பெங்களூருவில் மழை பெய்தபோது மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளானதால், மின்வாரியத்துறை அதிகாரிகளை மந்திரி டி.கே.சிவக்குமார் கண்டித்தார்.
பெங்களூரு,
பெங்களூருவில் மழை பெய்தபோது மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளானதால், மின்வாரியத்துறை அதிகாரிகளை மந்திரி டி.கே.சிவக்குமார் கண்டித்தார்.
என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்கர்நாடகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 3 நாட்கள் பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்துவிழுந்தன. மின் கம்பிகள் சாய்ந்து, மின்சார வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. நகரின் பல இடங்கள் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் பெரிய தொந்தரவுக்கு ஆளானார்கள். ஆனால் உடனே மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்காத மின்வாரியத்துறை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று தனது வீட்டில் மின்வாரியத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய மந்திரி டி.கே.சிவக்குமார், “பெங்களூருவில் மழை பெய்ததால் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பெஸ்காம் உதவி மையங்களுக்கு தொடர்பு கொண்டு புகாரை தெரிவித்தனர். எந்தெந்த அதிகாரிகள் எத்தனை புகார்களை பெற்றீர்கள், அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்“ என்றார்.
எனது மரியாதையே போய்விட்டதுமின்தடை பற்றி பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து, அதிகாரிகளை மந்திரி கண்டித்தார். உதவி மையங்களுக்கு புகார் வந்தவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மின்வாரிய ஊழியர்களின் கடமை என்று மந்திரி தெரிவித்தார். “பெங்களூருவில் முதல்–மந்திரி சித்தராமையா பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் மின்சாரம் 10 நிமிடங்கள் தடைபட்டது. இதனால் எனது மரியாதையே போய்விட்டது. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?“ என்றும் மந்திரி கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய மந்திரி டி.கே.சிவக்குமார், “எனக்கு மின்சாரத்துறை போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த துறையில் இருந்து கொண்டு மக்களின் புகார்களை தீர்க்க வேண்டியது அவசியம். எனக்கு போலீஸ் துறையை ஒதுக்குவது குறித்து முதல்–மந்திரி தான் முடிவு எடுக்க வேண்டும். எனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை சரியான முறையில் நிர்வகிப்பேன். காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி கிடைத்த பிறகு கட்சி பணியை நான் தொடங்க வேண்டும் என்பது இல்லை. கட்சி பணியை நான் எப்போதும் செய்து கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு வழங்கிய பணியை சிறப்பாக செய்வேன்“ என்றார்.