கரூர் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு குளறுபடி
கரூர் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கியில் அறிவிப்பை குளறுபடியாக அறிவித்ததால் அதிகாரியிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;
கரூர்,
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கரூர் ரெயில் நிலையத்திற்கு பகல் 11.25 மணி அளவில் வந்து புறப்படும்.
இந்த நிலையில் நேற்று காலை நாகர்கோவில் பயணிகள் ரெயிலில் பயணம் செய்வதற்காக பயணிகள் கரூர் ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் காத்திருந்தனர். ரெயில் முதலாவது நடைமேடையில் வந்து நின்று புறப்படும் என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பில் மாற்றம்இந்த நிலையில் ரெயில் 25 நிமிடம் தாமதமாக வரும் எனவும், 2–வது நடைமேடையில் ரெயில் வந்து நின்று புறப்படும் என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டன. இதனால் பயணிகள் தங்களது உடைமைகளுடன் நடைபாதை மேம்பாலம் வழியாக ஏறி 2–வது நடைமேடைக்கு சென்றனர். அங்கு ரெயிலுக்காக காத்திருந்தனர்.
அப்போது சிறிது நேரத்தில் நாகர்கோவில் பயணிகள் ரெயில் முதலாவது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டன. இதைதொடர்ந்து பயணிகள் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் முதலாவது நடைமேடைக்கு வந்தனர்.
பயணிகள் வாக்குவாதம்நடைபாதை மேம்பாலத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் படி ஏறி, இறங்கியதில் கடும் அவதி அடைந்தனர். ஒலிபெருக்கியில் தகவலை முறையாக அறிவிக்காமல் மாறி, மாறி குளறுபடியாக அறிவித்ததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். மேலும் ரெயில் எந்த நடைமேடையில் நிற்கும் என்பதில் குழப்பம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் சிலர், ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒலிபெருக்கியில் தகவலை முறையாக அறிவிக்க வலியுறுத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரி தனக்கு எதுவும் தெரியாது என்றார். இதனால் பயணிகள் ஆவேசமடைந்து அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் தாமதமாக வந்ததுபாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில் நிலைய மேலாளர் சுரேந்திரபாபு விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். அதன்பின் பயணிகள் சமாதானமடைந்தனர். இதற்கிடையில் கோவை– நாகர்கோவில் பயணிகள் ரெயில் 25 நிமிடம் தாமதமாக பகல் 11.50 மணி அளவில் கரூர் ரெயில் நிலையத்திற்கு முதலாவது நடைமேடைக்கு வந்தது. அதன்பின் ரெயிலில் ஏறி பயணிகள் பயணம் செய்தனர். இந்த சம்பவத்தால் கரூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.