துறைமுகம் தூர்வாரும் பணிக்கான கோப்பை சபையில் வைக்க வேண்டும்
துறைமுகம் தூர்வாரும் பணிக்கான கோப்பை சபையில் வைக்க வேண்டும் சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவு
புதுச்சேரி,
புதுவை துறைமுகம் தூர்வாரும் பணிக்கான கோப்பை சட்டசபையில் வைக்கவேண்டும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார். புதுவை சட்டசபையில் கேள்வி–பதில் நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–
முறைகேடு இல்லைஅசோக் ஆனந்து: புதுவை துறைமுகம் தூர்வாருவதற்காக கடன் வாங்கப்பட்டுள்ளதா? அதில் நடந்துள்ள முறைகேடு குறித்து அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
அமைச்சர் கந்தசாமி: துறைமுகம் தூர்வார கடன் வாங்கப்பட்டுள்ளது. தூர்வாரும் பணியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.
அசோக் ஆனந்து: இந்த பணி டெண்டர்விட்டு நடைபெறுகிறதா? டெண்டர் விடவில்லை என்றால் ஏன்?
அமைச்சர் கந்தசாமி: எனக்கு அதிக அதிகாரம் உள்ளது என்றவர்தான் (கவர்னர்) இந்த பணியை மத்திய அரசு நிறுவனத்துக்கு கொடுத்துள்ளார்.
அசோக்ஆனந்து: இதில் டெண்டர் விட்டுதான் பணி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அரசு ஏன் அதை செய்யவில்லை?
அன்பழகன்: இது தொடர்பாக விசாரணை வைக்கலாம்.
அமைச்சர் கந்தசாமி: நானும் விசாரணை வைக்கத்தான் சொல்கிறேன்.
சபையில் வையுங்கள்அசோக் ஆனந்து: கவர்னர் இந்த பணியை கொடுக்க சொன்னார் என்று கூறுகிறீர்கள். அதற்கான உத்தரவை காட்டுங்கள் பார்ப்போம்?
சபாநாயகர் வைத்திலிங்கம்: இதற்கு டெண்டர் வைத்தீர்களா? இல்லையா?
அமைச்சர் கந்தசாமி: இல்லை.
சபாநாயகர்: மத்திய அரசு நிறுவனம் என்பதால் டெண்டர் இல்லாமல் கொடுத்து உள்ளீர்கள். அந்த கோப்புகளை முதலில் சபையில் வையுங்கள்.
அதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து ஒட்டுமொத்தமாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து தான் பெயரிட்டு அழைப்பவர்களுக்கு மட்டுமே மைக் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் மற்றவர்கள் மைக் இணைப்பினை துண்டிக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அமைச்சர் கந்தசாமி: வருகிற திங்கட்கிழமை அந்த கோப்புகளை சபையில் வைக்கிறேன்.
கவர்னர் குறிப்பாணைமுதல்–அமைச்சர் நாராயணசாமி: துறைமுக தூர்வார வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டது. அதை ரத்து செய்யுமாறு கவர்னர் குறிப்பாணை அனுப்பினார். மேலும் அந்த பணியை மத்திய அரசுக்கு நிறுவனத்துக்கு கொடுக்கவும் உத்தரவிட்டார்.
கவர்னர் சொன்னதால் அந்த பணியை டெண்டர் விடாமல் மத்திய அரசு நிறுவனத்துக்கு கொடுத்தோம். 3 லட்சம் கியூபிக் மீட்டர் மணலை 4 மாதத்தில் தூர்வார கூறினோம். ஒரு கியூபிக் மீட்டருக்கு ரூ.470.50 கொடுக்கிறோம். கடந்த காலங்களில் ரூ.250–க்கு அதை தனியார் தூர்வாரினார்கள். இதுதொடர்பான கோப்புகளை சபையில் வைக்கிறோம்.
ரூ.6 கோடி இழப்புஅன்பழகன்: தூர்வாருவதற்கு நம்மிடம் 2 கப்பல்கள் உள்ளன. கடந்த ஆண்டு கேரள அரசு சார்பில் ரூ.302–க்கு தூர்வாரினார்கள். தனியார் ரூ.254–க்கு அந்த பணியை செய்தார்கள். கவர்னர்–அமைச்சரவை முரண்பாட்டால் டெண்டர் விடாமல் இந்த பணியை மத்திய அரசு நிறுவனத்துக்கு கொடுத்ததால் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் விசாரணை கமிஷன் கேட்கிறோம்.
தற்போது மத்திய அரசு நிறுவனமும் அவர்களுக்கு கீழ் இன்னொரு டெண்டர் விட்டு செய்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.5 கோடி செலவு செய்தாலே வருடம் முழுவதும் தூர்வாரலாம். பணிகளை இன்னமும் முடிக்காததால் மீனவர்களுக்கு ரூ.30 கோடி இழப்பு. இதற்கு கவர்னர்தான் காரணம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.