கவர்னர் பதவியில் இருக்க கிரண்பெடிக்கு தகுதி இல்லை

கவர்னர் பதவியில் இருக்க கிரண்பெடிக்கு தகுதி இல்லை: அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ்

Update: 2017-06-02 22:45 GMT

புதுச்சேரி,

கவர்னர் பதவியில் இருக்க கிரண்பெடிக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

சபாநாயகர் கேள்வி

புதுவை சட்டசபையில் சென்டாக் முதுகலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று அறிக்கை வாசித்தார். இந்த விவகாரத்தில் கவர்னர் கிரண்பெடியின் செயல்பாடு குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.

அப்போது சபாநாயகர் வைத்திலிங்கம், மாணவர்களை சேர்க்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது:–

கவர்னர் நாடகம்

மாணவர் சேர்க்கை வி‌ஷயத்தில் கவர்னர் கிரண்பெடி அரசு மீது குற்றம்சாட்ட நாடகம் நடத்தினார். நாங்கள் கடந்த 5 மாதமாக எத்தனையோ கூட்டங்கள் நடத்தி புதுவை மாணவர் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்துள்ளோம்.

இந்த ஆண்டு 50 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகளிடம் இருந்து பெற்று கலந்தாய்வு நடத்தினோம். சென்டாக் மூலம் தேர்வான மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பது நமது கடமை. இதுதொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 கல்லூரி நிர்வாகிகளை அழைத்துப் பேசினோம்.

கவர்னருக்கு தகுதியில்லை

மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக ஏதாவது எழுத்துப்பூர்வமாக வாங்கிக் கொண்டுகூட சேருங்கள் என்றோம். ஆனால் 2 கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை சேர்க்கவில்லை. நேற்றும் (நேற்று முன்தினம்), இன்றும்கூட (நேற்று) பேசினேன்.

சென்டாக் மூலம் தேர்வான மாணவர்களை சேர்ப்பது நமது கடமை. அதை நானே நேரில் சென்று ஏற்பாடு செய்கிறேன்.

இதற்கிடையே சென்டாக் அலுவலகத்துக்கு சென்று கவர்னர் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளார். புதுவையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளார். நம்மைப்பற்றியும், தலைமை செயலாளர், அதிகாரிகள் பற்றியும் தவறாக பேசுகிறார். கவர்னருக்கு அந்த சீட்டில் உட்காரவே தகுதி இல்லை.

இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் பேசினார்.

மேலும் செய்திகள்