இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இறைச்சிக்காக மாடு விற்க தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-02 22:45 GMT

காஞ்சீபுரம்,

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இறைச்சிக்காக மாடு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் கலைவடிவன் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன், மண்டல செயலாளர் விடுதலைசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் குமணன், திருவள்ளூர் தொகுதி செயலாளர் யோகா, முன்னாள் நகர்மன்ற தலைவர் ராசகுமார், கவுரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், பாலசிங்கம், தளபதி சுந்தர், கவுதமன் கோபு ஆகியோர் மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர். திருவள்ளூர் நகர செயலாளர் முத்தமிழன் நன்றி கூறினார்.

எல்லாபுரம் ஒன்றியம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி போன்றவற்றின் சார்பில் பெரியபாளையத்தில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் இறைச்சி சாப்பிடும் போராட்டம் நடந்தது.

இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எழிலரசன், மாவட்ட தலைவர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத், வாசுதேவன், அருள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக அனைவரையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் அரி, கும்மிடிப்பூண்டி தொகுதி துணை செயலாளர் பாபு ஆகியோர் வரவேற்றனர். முடிவில் விவசாய சங்க வட்ட தலைவர் மாரிமுத்து, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்