தமிழிசை சவுந்தரராஜனுக்கு செல்போனில் மிரட்டல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மர்மநபர், செல்போனில் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2017-06-02 22:30 GMT

பூந்தமல்லி,

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இவர், சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர், இவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘‘ஏய் தமிழிசை, மோடி எங்கே இருக்கிறார் என்று சொல்?. அவரது செல்போன் நம்பர் கொடு?. அவரது முகவரியை கொடு?. இப்படி எல்லாம் நீங்கள் செய்து கொண்டு இருந்தால் வெளியே செல்ல முடியாது’’ என கடுங்கோபத்துடன் மிரட்டும் தோனியில் பேசினார்.

தொடர்ந்து அவர், செல்போனில் மிரட்டியபடி பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

போலீஸ் பாதுகாப்பு

உடனடியாக இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன், தனது வக்கீல் தங்கமணியிடம் மர்ம மனிதன் செல்போனில் பேசி மிரட்டல் விடுத்த விபரத்தை கூறினார். அவர், அதனை விரிவாக எழுதி விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் புகார் செய்தார். அதன்பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிரட்டல் வந்ததை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீஸ் ரோந்து வாகனமும் அவரது வீட்டு அருகே நிறுத்தப்பட்டு உள்ளது.

போலீஸ் விசாரணை

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடி எடுத்த நிலைப்பாட்டை தமிழிசை சவுந்தரராஜன் ஆதரித்து பேசி வருவதால் அது தொடர்பாக மிரட்டல் வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனுக்கு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து, மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்