திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மத்திய அரசை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்,
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மத்திய அரசை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மாட்டிறைச்சி பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. மாவட்ட செயலாளர் ரா.சுபாஷ்சந்திரபோஸ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் மு.தங்கமணி வரவேற்றார். கோவேந்தன், ரா.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், அண்ணாமலை உள்பட பலர் பேசினர்.
பின்னர் மாட்டிறைச்சி பிரியாணியை எடுத்து வந்து அனைவருக்கும் வழங்க முயன்றனர். அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் மாட்டிறைச்சியை கையில் எடுத்து சாப்பிட தொடங்கினர். உடனடியாக போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.