ஒழுங்கீன மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

ஒழுங்கின மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-06-02 23:00 GMT

செய்யாறு

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் டி.மோகனகுமார் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயகுமார் கலந்து கொண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி அளித்த 8 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

பின்னர் அவர் பேசியதாவது:–

தீயை அணைக்க வேண்டும்

கண்ணுக்கு தெரிந்த கட்டிட தீ விபத்தினை பற்றி பேசுவதைவிட கண்ணுக்கு தெரியாத மாணவனிடம் உள்ள கல்வி அறியாமை என்ற தீயை அணைக்க வேண்டும். அதற்கு தலைமை ஆசிரியர் உரிய நடைமுறை செயல்படுத்த வேண்டும். பள்ளியின் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வருகிற கல்வியாண்டில் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் தமிழக அளவில் திருவண்ணாமலை மாவட்டம் முதல் 5 இடத்தில் இடம் பெற வேண்டும்.

மாவட்டத்தில் இருந்து கிட்டதட்ட 500 ஆசிரியர்கள் மாறுதல் பெற்றுள்ளனர். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நிரப்ப பள்ளி தலைமை ஆசிரியர் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான ஊதியம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் நிதி பெற்று வழங்கப்படும்.

கடும் நடவடிக்கை

மாணவர்களின் நலன் பாதிக்கும்வகையில் செயல்படும் ஒழுங்கீன மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைவாக பெற்றுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் 2017–2018–ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு செயல்திட்டம் வகுத்து 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும். பள்ளியின் தூய்மை, மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பணிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில்பள்ளியின் செயல்பாடுகள் குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்