ஈரோடு மாவட்டத்தில் 1,200 மணல் லாரிகள் வேலை நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் 1,200 மணல் லாரிகள் வேலை நிறுத்தம் குவாரிகளில் டோக்கன் முறையில் பாரம் ஏற்ற கோரிக்கை

Update: 2017-06-02 22:30 GMT

ஈரோடு,

குவாரிகளில் டோக்கன் முறையில் மணல் பாரம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 1,200 மணல் லாரிகள் ஓடவில்லை.

வேலை நிறுத்தம்

தனியார் மணல் குவாரிகள் மூடப்பட்டு அரசே குவாரிகளை நடத்தும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 29–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்பின்னர் கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வந்த தனியார் மணல் குவாரிகள் மூடப்பட்டன. அங்கு பொதுப்பணித்துறை சார்பில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆனால் உள்ளூர் லாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதால் வெளியூர் மணல் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மணல் குவாரிகளில் வெளியூர் மாவட்டங்களை சேர்ந்த லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியும், டோக்கன் முறையில் மணல் லாரிகளில் பாரம் ஏற்ற அனுமதிக்கக்கோரியும் மணல் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு சோலார் பகுதியில் மணல் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

1,200 லாரிகள்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.ஏ.முருகேசன் கூறியதாவது:–

கரூர் அருகே உள்ள மாயனூர், சிந்திலவாடி, திருக்காம்புலியூர், பெட்டவாய்த்தலை, சிறுகமணி, நெரூர், வாங்கல் மற்றறும் திருவேங்கிமலை, முசிறி உள்ளிட்ட இடங்களில் தனியார் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இங்கிருந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுமார் 1,200 லாரிகளில் கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள குவாரிகளுக்கு சென்று மணல் பாரம் ஏற்றி வந்தனர்.

இந்தநிலையில் தனியார் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்பின்னர் தனியார் மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுப்பணித்துறை சார்பில் ஒரு சில குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

டோக்கன் முறை

குவாரிகளில் தினமும் சுமார் 3 ஆயிரம் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 150 லாரிகளில் மட்டுமே மணல் ஏற்றப்படுகிறது. அதிலும், உள்ளூர் லாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் எங்களுடைய லாரிகளில் மணல் பாரம் ஏற்றுவதில்லை. கடந்த ஒரு மாதமாக எங்களுடைய லாரிகள் ஓடாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

எனவே வெளியூர் மணல் லாரி உரிமையாளர்கள் கடந்த மாதம் கரூரில் போராட்டம் நடத்தினோம். அப்போது கரூர் மாவட்ட கலெக்டர் அங்கு வந்து, அனைத்து லாரிகளுக்கும் டோக்கன் முறையில் மணல் பாரம் ஏற்றப்படும் என்று அறிவித்தார். ஆனால் அரசியல் பிரமுகர்களின் பரிந்துரையின்பேரில் உள்ளூர் லாரிகளுக்கு மட்டுமே மணல் பாரம் ஏற்றப்பட்டு வருகிறது.

விலை உயர்வு

மணல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் விலையும் பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. குவாரிகளில் ரூ.1,050 மட்டுமே செலுத்தி மணல் எடுக்கப்படுகிறது. ஆனால் ஈரோட்டில் ஒரு லாரி மணலை ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்கிறார்கள். இதனால் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

குவாரிகளில் டோக்கன் முறையில் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (அதாவது நேற்று) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈட்டு வருகிறோம். மேலும், வெளியூர் லாரிகளை ஈரோட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளோம். அதன்படி கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து மணல் பாரம் ஏற்றி வரும் லாரிகளை ஈரோட்டுக்குள் வர அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்