அறச்சலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அறச்சலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அறச்சலூர்,
அறச்சலூர் அருகே உள்ள அட்டவனை அனுமன்பள்ளி மாப்பிள்ளைபெரியபாளையம் பகுதியை சேர்ந்த கிராமமக்கள் கடந்த ஒரு ஆண்டாக தனியார் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தார்கள். இதற்கிடையே கிணறு வற்றியதால் கடந்த சில மாதங்களாக கடுமையாக குடிநீர் தட்டுப்பட்டால் அவதிப்பட்டு வந்தார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை 6½ மணி அளவில் மாப்பிள்ளை பெரியபாளையம் கிராம மக்கள் ஒன்று திரண்டு சென்று, அங்கே செல்லும் அறச்சலூர்–வெள்ளோடு ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
உடனே நடவடிக்கைஇதுகுறித்து தகவல் கிடைத்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிராமமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது கிராமமக்கள் போலீசாரிடம், ‘பல மாதங்களாக குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறோம். விரைவாக எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும்‘ என்றார்கள்.
உடனே போலீசார் அதிகாரிகளிடம் பேசி லாரி மூலம் மாப்பிள்ளை பெரியபாளையம் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.
வாகனங்கள் நின்றனஇந்தநிலையில் மாப்பிள்ளை பெரியபாளையம் கிராமமக்களின் சாலை மறியல் முடிந்த ½ மணி நேரத்தில் காலை 8 மணி அளவில் அருகே உள்ள குடுமியான்பாளையம் பண்ணைக்காடு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த கிராமமக்கள் அறச்சலூர்–வெள்ளோடு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்லமுடியாமல் நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராமமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
போக்குவரத்து பாதிப்புஅப்போது கிராமமக்கள், ‘நாங்கள் 150 குடும்பத்தினர் பல நாட்களாக சீராக குடிநீர் கிடைக்காமல் அல்லல் படுகிறோம். எங்களுக்கு முடிவு தெரியும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம்‘ என்றார்கள். இதனால் காலை 10 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் அதிகாரிகளிடம் பேசி, பண்ணைக்காடு ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை லாரியில் தண்ணீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்தார்கள். அதை ஏற்று கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டார்கள். இந்த போராட்டத்தில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.