கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு: புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில் புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆஜராகும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
புதுக்கோட்டை பூதம்பூரைச் சேர்ந்த குமரேசன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது
புதுக்கோட்டை நகராட்சியின் மையத்தில் அமைந்துள்ள நைனாரிக்குளம் பகுதியை பொதுமக்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதோடு, நகராட்சியின் சார்பில் பொதுக்கழிப்பிடங்களும், நியாயவிலைக்கடையும் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல, சின்ன வெங்கபாயன்குளம் பகுதியையும் சிலர் ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்யும் நிலை உள்ளது.
இதனால், சின்ன வெங்கபாயன்குளம் சுகாதாரக்கேடு அடைந்துள்ளதோடு, மழைகாலங்களில் தண்ணீரை சேமிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை பகுதியில் உள்ள பல்வேறு குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
நடைமுறைப்படுத்தவில்லைஇந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 2–ந்தேதி உத்தரவிட்டனர்.
ஆனால் இன்று வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நேரில் ஆஜராக உத்தரவுஇந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 5–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.