ஊட்டியில் பலத்தமழை; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

ஊட்டியில் பலத்த மழை பெய்ததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

Update: 2017-06-02 20:30 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது. மழை காரணமாக சாலையில் நடந்து சென்ற சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தினர். ஊட்டி மார்க்கெட் பகுதியில் மழைநீரும், சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடியது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் மார்க்கெட், படகு இல்ல சாலை, ரெயில்வே போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. ஊட்டி மார்க்கெட் பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை கடை வைத்திருப்பவர்கள் அடைப்புகளை அகற்றி, தண்ணீரை வெளியேற்றினர்.

கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டதால், அதை ஓட்டி உள்ள கிரீன்பில்டு பகுதியில் சுமார் 20 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டில் உள்ள பொருட்கள் தண்ணீரில் அடித்து செல்லாமல் இருக்க, அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைத்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கோடப்பமந்து கால்வாயை தூர்வாரக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்