குடிதண்ணீருக்காக கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் பெண்கள்
திருப்பத்தூர் அருகே குடிதண்ணீருக்காக பெண்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ளது நடுவிக்கோட்டை மற்றும் கீழையூர். இந்த கிராமங்களில் 500–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் உப்பு நீர் மட்டுமே கிடைக்கிறது. அந்த நீரும் நடுவிக்கோட்டை அருகில் உள்ள மேல்குடி பகுதியில் தொட்டி அமைக்கப்பட்டு அதில் இருந்து தெற்கு நடுவிக்கோட்டையில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் தண்ணீரை ஏற்றி அதன் மூலம் இந்த பகுதி கிராம மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கிராம ஊராட்சி மூலம் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி கூட்டுக் குடிநீரும் வழங்கப்பட்டு வந்தது. இதில் கடந்த சில மாதங்களாக காவிரி குடி தண்ணீர் கிடைக்காததால் இந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் ஒரு குழாயில் மட்டும் குடி தண்ணீர் வந்துள்ளது. தற்போது கடந்த 10 நாட்களாக இந்த குடிதண்ணீர் வராததால் பெண்கள் அருகில் உள்ள ஆவந்திப்பட்டி என்ற கிராமத்திற்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று குடிதண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்இதனால் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி என்பவர் கூறியதாவது:–
எங்கள் கிராமத்தில் கடந்த சில தினங்களாக குடி தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தினசரி தேவைக்காக 2 குடம் தண்ணீருக்காக காலி குடங்களை நீண்ட வரிசையில் அடுக்கி வைத்து கொளுத்தும் வெயிலில் ஒருநாள் பொழுதை இங்கேயே கடத்தி விடுகிறோம். முன்பு இதில் இருந்த 2 குழாயில் தண்ணீர் வந்தது. தற்போது ஒரு குழாயில் மட்டும் தண்ணீர் வருவதால் காத்திருக்கும் நேரம் அதிகரிக்கிறது. இவ்வாறு பிடிக்கப்படும் இந்த 2 குடம் தண்ணீரை சமைப்பதற்கும், குடிப்பதற்கும் 4 நாட்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு கூடுதலாக குடிதண்ணீர் தொட்டி அமைத்து தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளைகளில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.