ஆழ்வார்திருநகரியில் வைகாசி அவதார திருவிழா: நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் வைகாசி அவதார திருவிழாவில், நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2017-06-02 20:00 GMT
தென்திருப்பேரை,

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் வைகாசி அவதார திருவிழாவில், நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

வைகாசி அவதார திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் கடைசி தலமும், நம்மாழ்வார் அவதரித்த தலமுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி அவதார திருவிழா கடந்த 29–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

5–ம் திருநாளான நேற்று காலையில் நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நவதிருப்பதி பெருமாள்கள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் உள்ள பல்வேறு மண்டபங்களிலும் பெருமாள்கள் தனித்தனியாக எழுந்தருளினர். கோவிலின் முன்மண்டபத்தில் நம்மாழ்வார் வீற்றிருந்தார்.

மங்களாசாசனம்

பின்னர் நம்மாழ்வார் பூப்பந்தலில் எழுந்தருளினார். தொடர்ந்து ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர் கடிவான், திருப்புளியங்குடி காய்சின வேந்தன், இரட்டை திருப்பதி தேவர்பிரான், செந்தாமரை கண்ணன், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் ஆகிய நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் பெருமாள்கள், கோவில் மண்டபங்களுக்கு திரும்பினர். மங்களாசாசனம் முடிந்தவுடன் நம்மாழ்வார் மாட வீதி, ரத வீதி வழியாக சென்று, கோவில் முன்மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், நவதிருப்பதி பெருமாள்களுக்கு திருமஞ்சனம், புஷ்ப அலங்காரம், தீர்த்த வினியோகம் நடந்தது.

6–ந்தேதி தேரோட்டம்

இரவில் கருடசேவை நடந்தது. கருட வாகனங்களில் நவதிருப்பதி பெருமாள்களும், அன்ன வாகனத்தில் நம்மாழ்வாரும், பரங்கி நாற்காலியில் மதுரகவியாழ்வாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

9–ம் திருநாளான வருகிற 6–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10–ம் திருநாளான 7–ந்தேதி (புதன்கிழமை) மதியம் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், தக்கார் கார்த்திக் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்