கோவில் திருவிழாவில் தகராறு வாகனங்கள், வீட்டு ஜன்னல்களை நொறுக்கி கும்பல் வன்முறை

வேலூரை அடுத்த கருகம்பத்தூரில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

Update: 2017-06-01 23:34 GMT

வேலூர்,

வேலூர் அருகே கருகம்பத்தூரில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு எதிரொலியாக எதிர்தரப்பினர் வசிக்கும் தெருவுக்குள் புகுந்த கும்பல் வாகனங்கள், வீட்டு ஜன்னல்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உருட்டுக்கட்டையுடன் புகுந்த கும்பல்

வேலூரை அடுத்த கருகம்பத்தூரில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 30–ந் தேதி இரவு கருகம்பத்தூர் காலனியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை சிலர் சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்படவே அவர்கள் திருவிழா பார்க்காமல் திரும்பி சென்றுவிட்டனர்.

நேற்று முன்தினம் பகலில் தேர்திருவிழா நடந்தது. ஆனால் காலனியை சேர்ந்த யாரும் கோவிலுக்கு செல்லவில்லை. நேற்று பகலில் காலனியை சேர்ந்த ஆண்கள் வேலைக்கு சென்றுவிட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் பகல் 1 மணியளவில் 50–க்கும் மேற்பட்டவர்கள் கருகம்பத்தூர் காலனிக்கு சென்றுள்ளனர்.

வாகனங்கள் உடைப்பு

அவர்கள் அங்கு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மோட்டார்சைக்கிள்களையும் அடித்து உடைத்து, செங்கல் மற்றும் கற்களை வீசி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அவர்கள் உடைத்தனர். இந்த சம்பவத்தை பார்த்த பெண்கள் அலறியடித்து ஓடினர். சிலர் வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டனர்.

மேலும் மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்து மின்விளக்குகளை உடைத்தனர். இதில் அங்கிருந்த அருள் என்ற 3 வயது குழந்தைக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.

இந்த சம்பவத்தால் காலனியில் உள்ள தெருக்களில் செங்கல் மற்றும் கற்கள் சிதறி கிடந்தன. சிறிது நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. இதனிடையே கும்பல் வன்முறையில் ஈடுபட்டது குறித்து தகவல் அறிந்ததும் வேலைக்கு சென்றிருந்த ஆண்கள் திரண்டு வந்தனர்.

போலீஸ் குவிப்பு

அவர்கள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபடமுயன்றனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதனை தொடர்ந்து காலனிக்குள் புகுந்து தாக்கியவர்கள் மீது விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கருகம்பத்தூரில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

மேலும் செய்திகள்