காங்கிரஸ் ஆட்சியில்தான் கொலைகள் அதிகம் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது ஆளும் காங்கிரஸ் ஆட்சியில்தான் கொலைகள் அதிகம் நடந்துள்ளன என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

Update: 2017-06-01 23:34 GMT

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பட்ஜெட் தொடர்பான பொது விவாதத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

எந்த திட்டமும் இல்லை

புதுவை பட்ஜெட்டில் தேவையற்ற செலவினங்களை குறைக்க எந்த திட்டமும் இல்லை. மாநில வருவாயை பெருக்கவும் நடவடிக்கை இல்லை. சரக்கு சேவை வரியால் புதுவைக்கு பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 4 பகுதிகளும் சமமான வளர்ச்சி பெறவில்லை.

நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தி வருகிறது இந்த அரசு. குடிசைமாற்று வாரியம் மூலம் வீடுகட்ட ஒரு பயனாளிக்குக்கூட இதுவரை நிதி வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு முழுகல்வி நிதியுதவி வழங்கும் கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார். அந்த கோப்புக்கு ஒப்புதல் பெறவேண்டும்.

அதிக கொலைகள்

சட்டம் ஒழுங்கு இந்த அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் கடந்த ஆண்டில் 34 கொலைகள் நடந்துள்ளன. மோட்டார்சைக்கிள் திருட்டுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதே கிடையாது. காவல்துறை அதிகாரிகளும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலழகன் கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ததில் இருந்து குற்றவாளிகளை கைது செய்தது வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குற்றவாளிகளை தப்பிக்கவைக்க பலரும் பகிரங்கமாக முயன்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதால் இதை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு அரசு துணை போகிறதா?

பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக அரசு ஒரு முடிவு எடுக்கவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற அரசாணை பிறப்பிக்க வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடந்த விசாரணை அறிக்கை என்னவானது? குற்றவாளிகளுக்கு இந்த அரசு துணைபோகிறதா?

மதுபான விற்பனையை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாலே ரூ.500 கோடி கூடுதல் வருமானம் பெறலாம். மதுபான கடைகளை வெளிப்படையாக ஏலம் விடலாம். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் என நமது மாநிலத்தில் ஒரு லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கிரீன்கார்டு கொடுங்கள். போலி ரே‌ஷன்கார்டுகளை ஒழியுங்கள்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

மேலும் செய்திகள்