பவானிசாகர் அருகே மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
பவானிசாகர் அருகே மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் செவிடன் என்கிற ஆறுமுகம் (வயது 60). இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி ரங்கம்மாள் (57). இவர் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வந்தார்.
மனைவி ரங்கம்மாள் நடத்தையில் ஆறுமுகத்துக்கு சந்தேகம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 5–ந் தேதி மாலை ஆறுமுகம் கோடேபாளையம் பகுதியில் உள்ள காட்டில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார். ரங்கம்மாள் வேலையை முடித்து விட்டு அந்த வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தார்.
கல்லால் தாக்கி கொலைஅப்போது ஆறுமுகம் மனைவி ரங்கம்மாளிடம், ‘உன்னுடைய நடத்தை குறித்து பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். இதனால் எனக்கு அவமானமாக உள்ளது. எனவே இனி நீ ஒழுங்காக இருக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மனைவியின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து ரங்கம்மாளின் முகத்தில் ஓங்கி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ரங்கம்மாள் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆயுள் தண்டனைஇதுகுறித்த புகாரின்பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி என்.திருநாவுக்கரசு தீர்ப்பு கூறினார்.
மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 1 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஏ.நாகரத்தினம் ஆஜர் ஆனார்.