குழந்தைகளுடன் சாலை மறியல் செய்த 25 பெண்கள் கைது கண்ணீர் விட்டு கதறிய பரிதாபம்

அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி சாலை மறியல் செய்த 25 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-06-01 22:48 GMT

தேனி,

தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் புதிதாக அரசு மதுபான கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அரசு மதுபான கடை அமைக்கும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மீண்டும் இந்த கடையை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, கடையை திறக்க முயற்சி எடுக்கப்பட்டது.

இதையறிந்த இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் கடந்த 30–ந்தேதி உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்கள் ஊரில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று தாசில்தார் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கடை திறக்கக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்ததால் பெண்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில், மக்களின் தொடர் எதிர்ப்புகளை மீறி இந்த மதுபான கடையை நேற்று காலை 12 மணிக்கு திறக்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுதது காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலையில் வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் மதுரை சாலையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியல் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலை கைவிடுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால், மறியலை கைவிட மறுத்து பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25 பேர் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கி கைது செய்ய முயன்றனர். இதனால், பெண்கள் சாலையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி போராட்டத்தை தொடர்ந்தனர். கதறி அழுதபடி போலீசாரை பார்த்து பெண்கள் சிலர் கூறுகையில், ‘எங்கள் ஊரில் மதுக்கடை அமைப்பதை தடுக்க வில்லை. தினமும் குடித்து விட்டு வரும் கணவன் எங்களையும், குழந்தைகளையும் தாக்கி வருகின்றனர். அதற்கு புகார் அளித்தாலும் போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை எடுப்பதில்லை. ஊருக்குள் மதுக்கடை வந்தால் எங்களால் நிம்மதியாய் வாழ முடியாது’ என்றனர்.

பெண்கள் அழுவதை பார்த்து அவர்களின் குழந்தைகளும் கதறி அழுதனர். சுற்றிலும் வேடிக்கை பார்க்க கூடிய பொதுமக்களிடமும் இந்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 25 பெண்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்களுடன் வந்த 12 குழந்தைகளையும் போலீசார் வேனில் அழைத்துச் சென்றனர். குழந்தைகளையும், பெண்களையும் தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போரட்டம் காரணமாக நேற்று திறக்க இருந்ததாக கூறப்பட்ட மதுக்கடை திறக்கப்படவில்லை.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அரசு மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பெண்கள் சாலை மறியல் செய்தனர். மதுக்கடை அமைக்கக்கூடாது என்று மறியல் செய்த பெண்களும், அவர்களின் குழந்தைகளும் கதறி அழுத காட்சி.

போலீசார் இழுத்தபோது பெண்ணின் கம்மல் கழண்டு விழுந்தது

அரசு மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் நேற்று சாலை மறியல் செய்தனர். மறியல் செய்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்ய முயன்றனர். அப்போது, சுமதி என்ற பெண்ணை போலீசார் இழுத்தபோது அவருடைய இடது காதில் அணிந்து இருந்த கம்மல் கழண்டு விழுந்தது. அதனை பார்த்த மற்ற பெண்கள், போலீசாரிடம் இருந்து சுமதியை மீட்டனர். அவருடைய கம்மலை காணவில்லை என்று கூறியதை தொடர்ந்து, அங்கு விழுந்து கிடந்த கம்மலை மற்றொரு பெண் எடுத்து சுமதியிடம் கொடுத்தார்.

மேலும் செய்திகள்