சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த ஊழியர் உள்பட 6 பேர் கைது
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் தங்கம் கடத்தி வந்த ஊழியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் தங்கம் கடத்தி வந்த ஊழியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊழியர் பிடிபட்டார்துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணி ஒருவர் ஏர்பஸ்சில் ஏறி விமான நிலைய வளாகத்திற்கு வந்தார். அப்போது அவர் இருக்கைக்கு கீழ் பார்சலை வைத்து விட்டு சென்றுவிட்டார். விமான நிலைய ஊழியர் நதீம் அன்சாரி (வயது29) என்பவர் அந்த பார்சலை எடுத்து கொண்டு அங்கிருந்து நைசாக நழுவ முயன்றார். ஆனால் இதை கவனித்த சுங்கவரித்துறை அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் நடத்திய சோதனையில், அந்த பார்சலில் 4 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். இதையடுத்து சகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதமாக பயணிகளிடம் தங்கத்தை பெற்று அதனை கடத்தி விமான நிலையத்தின் வெளியே சென்று பயணிகளிடம் ஒப்படைத்து வந்தது தெரியவந்தது.
6 பேர் கைதுஇதன் மூலம் அவர் வாரத்திற்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் சம்பாதித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை விமான நிலைய அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த தபுசும் ஆரிப் சேக், டோங்கிரியை சேர்ந்த ஜூலைக்கா உஸ்மான் (47), மோகனா ஜேம்ஸ் (32), அப்துல் காதீர் (53), பாத்திமா சேக் ஆகிய 5 பேரை சாகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.79 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மூலம் கடந்த 2 நாட்களில் தங்கம் கடத்தியது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.