நிலத்தடி நீரினை பாதுகாக்க மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும்

நிலத்தடி நீரினை பாதுகாக்க மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும் என்று மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் தெரிவித்தார்.

Update: 2017-06-01 22:13 GMT

ஊட்டி,

ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இளநிலை வேளாண் பொறியியல் மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் மாணவர்களுக்கான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்த களப்பயிற்சி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஆராய்ச்சி மைய தலைவர் கோலா தலைமை தாங்கினார். இளநிலை வேளாண் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான களப்பயிற்சியை தனியார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஜான் ஓரல் பாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில் மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் கலந்துகொண்டு, களப்பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியானது நேற்று முதல் தொடங்கி வருகிற 30–ந் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. பயிற்சியில் குஜராத், கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, சிக்கிம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இளநிலை வேளாண் பொறியியல் பயிலும் மாணவ–மாணவிகள் 60 பேர் கலந்து கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மண், நீர்வள பாதுகாப்பு

இளநிலை வேளாண் பொறியியல் பயின்று வரும் மாணவர்களுக்கு மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்த செயல்திறனை மேம்படுத்துவதே களப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். பயிற்சியில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு உள்ளனர். பயிற்சியின் போது மாணவர்களுக்கு மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்த களப்பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் பாடப்புத்தகங்களில் படித்ததை, தற்போது நேரில் கண்டு தங்களது அறிவு மற்றும் செயல்திறனை வளர்த்து கொள்ள முடியும். ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்து சென்று, அவர்களுக்கு திறன் மேம்பாடு, செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு வழிமுறையில் மழைநீர் சேகரிப்பு, வடிகால் ஓடை பராமரிப்பு, மேலாண்மை திட்டமிடுதல், கசிவுநீர் கட்டமைப்பு, உழவியல், வனவியல் முறைகள், காலநிலை மாற்ற விளைவுகள், மறு சுழற்சி, மண் அறிவியல், புவியியல் தகவல் மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் வேளாண் துறைகளில் உதவி பொறியாளராக வாய்ப்பு உள்ளது.

நவீன தொழில்நுட்பம்

மண் மற்றும் நீர்வள பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் கடைப்பிடித்தால் நிலத்தடி நீரை அதிகமாக சேமிக்க ஏதுவாக இருக்கும். மாணவர்கள் தாங்கள் கற்றதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் காலநிலை மாற்றம் மற்றும் மழை அளவு குறைவு ஆகும். எனவே, குளங்களை தூர்வார வேண்டும், தண்ணீரை சேமிக்க அனைவரும் பழக வேண்டும். குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்வது இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம். ஆகவே, எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீரின் அளவு குறையும். எனவே, மாணவர்கள் அதனை பாதுகாக்க மண் மற்றும் நீர்வள பாதுகாப்பின் மூலம் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 65 ஆண்டுகளாக, வருடத்திற்கு 1324 மில்லி மீட்டர் அளவில் சராசரியாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு 48 சதவீத மழை தான் பெய்து உள்ளது. ஆனால் இந்த ஆண்டு 1200 மில்லி மீட்டர் அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நீலகிரி மாவட்டத்தில் 334.8 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்