ரூ.204 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி பேச்சு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மூலம் 12,404 பேருக்கு ரூ.204 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கோவையில் சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி பேசினார்.

Update: 2017-06-01 22:00 GMT

சரவணம்பட்டி,

கோவை கொடிசியா சார்பில் 17–வது சர்வதேச எந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி ‘இன்டெக் 2017’ கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நேற்று தொடங்கியது. கொடிசியா தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். கண்காட்சியின் தலைவர் பாலு வரவேற்றார்.

தென்னை நார் வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:–

ரூ.204 கோடி கடன்

இந்த சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை பார்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டேன். டெல்லியில் இருந்து நேரடியாக கோவைக்கு விமானத்தில் வந்திருக்கலாம். ஆனால் நான் டெல்லியில் இருந்து சென்னை வந்திறங்கி அங்கிருந்து சாலை வழியாக புதுச்சேரி, சேலம் வழியாக வந்திருக்கிறேன்.

இதன் மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் 12,404 பயனாளிகளுக்கு ரூ.204 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சமுதாய மக்களும், பெண்களும் உயர்வு பெற வேண்டும் என மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

ஆயிரம் சட்டங்கள் திருத்தம்

3 ஆண்டுகள் நிறைவடைந்து 4–ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடி தலைமையிலான அரசில் எந்த மந்திரி மீதும் ஊழல் குற்றச்சாட்டு கிடையாது. பிரதமர் மோடி இதுவரை 54 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி உள்ளார்.

ஒரே தேசம், ஒரே வரி என்ற கொள்கையுடன் மத்திய செயல்பட்டு வருகிறது. இதுவரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த ஆயிரம் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வளர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கலந்துகொண்டவர்கள்

கண்காட்சியில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், பெஞ்சமின், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.பி.நாகராஜன் எம்.பி., சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவன (எம்.எஸ்.எம்.இ.) அமைச்சகத்தின் செயலாளர் கே.கே.ஜலான், மேம்பாட்டு ஆணையர் சுரேந்திரநாத் திரிபாதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவன தமிழக முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் 536 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, தைவான், சீனா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டில்லி, ஹரியானா, பஞ்சாப், உத்திரபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டன.

தொழில்நுட்பம்

இந்த கண்காட்சியின் மூலம் சி.என்.சி. எந்திரம் மற்றும் உதிரி பாகங்கள், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், லேசர் கட்டிங் மெஷின்கள், ஹேண்ட் டூல்ஸ், கட்டிங் டூல்ஸ், ஜெனரல் என்ஜினியரிங், ஹைட்ராலிக் மற்றும் நியுமெட்டிக் சிஸ்டம்ஸ் உள்பட பல்வேறு எந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு 4, 5–ந் தேதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் அனுமதியும், முன்பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் வர்த்தகர்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், பொதுமக்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

--–

ராணுவ, மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும்

தொழிற்பேட்டைகளை தமிழகத்தில் அமைக்க வேண்டும்

மத்திய அரசுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

விழாவில் தமிழக நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–

தனிநபர் வருவாயில் இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் தமிகத்தில் மட்டும் 70 சதவீதம் வருவாய் உள்ளது. ராணுவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டையும், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டையும் தேவை. இதை மத்திய அரசு தமிழத்தில் அமைக்க வேண்டும்.

இந்த தொழிற்பேட்டைகளை கோவைக்கு கொண்டு வருவதில் நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன். கோவையில் உள்ள தொழில்துறையினர் தொழிற்பேட்டை வருவதற்கு வழிவகுக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை பொறுத்தவரை 53 அமைப்புகளிடம் கருத்துக்களை கேட்டுள்ளோம். இது குறித்து நிதி அமைச்சர் மற்றும் முதல்– அமைச்சரை சந்தித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்