சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்

சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

Update: 2017-06-01 21:58 GMT

மைசூரு,

சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

கண்பார்வையற்ற தம்பதி கோரிக்கை

முதல்–மந்திரி சித்தராமையா 2 நாள் சுற்றுப்பயணமாக மைசூருவுக்கு வந்துள்ளார். அவர் பிரியப்பட்டணா, உன்சூர் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். பின்னர் இரவில் சித்தராமையா மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார்.

நேற்று காலை அவர் தனது வீட்டு வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கண் பார்வையற்ற தம்பதியான கிருஷ்ணா–பூர்ணிமா, சித்தராமையா சந்தித்து பேசினர். அப்போது அந்த தம்பதியினர், தங்களுக்கு கண்பார்வை இல்லை. நாங்கள் மைசூரு ரெயில் நிலையம் அருகே ஆர்மோனியம் வாசித்து பிச்சையெடுத்து வருகிறோம். தற்போது எங்களது ஆர்மோனியம் உடைந்து விட்டது. எனவே புதியதாக ஆர்மோனியம் வாங்க நிதி உதவி வழங்கும்படி சித்தராமையாவிடம் கோரிக்கை வைத்தனர். உடனே சித்தராமையா, ஆர்மோனியம் வாங்க கண்பார்வையற்ற தம்பதிக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தார். அதற்கு அவர்கள், சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.

மந்திரி சபை விரிவாக்கம்

அதன்பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விவரம் பின்வருமாறு:–

கேள்வி:– கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் எப்போது நடைபெறும்?

பதில்:– சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிற மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும்.

கேள்வி:– அடுத்த ஆண்டு (2018)நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்–மந்திரி யார்?

பதில்:– முதல்–மந்திரி யார்? என்பது பற்றி காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

கேள்வி:– போலீஸ் மந்திரி பதவியை பரமேஸ்வரை ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதே?

பதில்:– அது காங்கிரஸ் மேலிடம் விடுத்த உத்தரவு. கட்சி மேலிட உத்தரவுப்படி எல்லாம் நடக்கிறது.

மழை வேண்டி சிறப்பு பூஜை?

கேள்வி:– கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி டி.கே.சிவகுமாருக்கு வழங்காததால் அவர் உங்கள் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:– என் மீது டி.கே.சிவகுமாருக்கு எந்த வருத்தமும், அதிருப்தியும் இல்லை. கட்சி மேலிடம் அவருக்கு கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியை வழங்கியுள்ளது. கட்சி மேலிட உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் தான். அதனால் பிரச்சினை இல்லை.

கேள்வி:– மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்படும் என்று நீர்ப்பாசனத் துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறியுள்ளாரே?

பதில்:– மழை வேண்டி சிறப்பு பூஜை செய்தால், மழை வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. எப்போது மழை வருமோ, அப்போது மழை வரும். அது இயற்கை நியதி. மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்துவது பற்றி என்னிடம் மந்திரி எம்.பி.பட்டீல் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்