கோவை மாநகராட்சியை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சியை கண்டித்து வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2017-06-01 21:57 GMT

கோவை,

கோவை மாநகராட்சியை கண்டித்து கோவை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமை தாங்கி பேசியதாவது:–

கோவை மாநகராட்சியில் அனைத்து மட்டத்திலும் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை தரம் பிரித்து லாரிகளில் அனுப்ப பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. மாநகராட்சி பகுதியில் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதிலும் ஊழல் நடந்துள்ளது. கோவையில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் அனைத்தும் தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட் டவை. காந்திபுரத்தில் கட்டுப்பட்டு வரும் பாலமும் கடந்த 2010–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்டது தான்.

பாடம் கற்பிக்க வேண்டும்

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளன. சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. சாக்கடையில் தண்ணீர் தேங்கி டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச் சல் போன்ற நோய் பரவி வருவதை மாநகராட்சியால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே கோவை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டிற்கு காரணமான அ.தி.மு.க.விற்கு வருகிற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு முத்துசாமி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, அவைத்தலைவர் மெட்டல்மணி, முன்னாள் கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், மீனா லோகு, வக்கீல் கணேஷ்குமார், கோவை வீரகோபால், அஞ்சுகம் பழனியப்பன், பாரம் தூக்கும் தொழிற்சங்க பொதுச் செயலாளர் பிரபாகரன், தலைவர் முகமது, சுந்தர்ராஜன், குனியமுத்தூர் லோகு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. கொடிகளை ஏந்தி வந்திருந்தனர். அவர்கள் கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.


மேலும் செய்திகள்