கோவையில், நில அளவை ஆவணம் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது

கோவையில் நில அளவை ஆவணம் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-01 23:00 GMT

கோவை,

கோவையை அடுத்த தொப்பம்பட்டி ஜக்கம்பாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன்(வயது 32). எலெக்ட்ரிசியன். இவருடைய தாத்தா நாராயணசாமி பெயரில் கோவை சித்தாபுதூரில் 2¼ சென்ட் வீட்டுமனை உள்ளது. அந்த வீட்டுமனையை விற்க தாமோதரன் திட்டமிட்டார். இதற்காக நகர நில அளவை ஆவணம் தேவைப்பட்டது. அந்த ஆவணம் கோவை மாநகராட்சியில் தான் உள்ளது. அதை பெறுவதற்காக கோவை மத்திய மண்டலத்தில் நில அளவை பிரிவில் விண்ணப்பித்தார். இதற்காக கட்டணம் ரூ.150–ஐ தாமோதரன் செலுத்தினார்.

இந்த நிலையில் மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் பொள்ளாச்சியை சேர்ந்த பத்மநாபன் என்கிற விஜய் பத்மானந்தன்(53) என்பவர் தாமோதரனை அணுகி வீட்டுமனைக்கான ஆவணத்தை கொடுக்க வேண்டுமென்றால் ரூ.1,500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க தாமோதரன் விரும்பவில்லை.

மாநகராட்சி ஊழியர் கைது

இதுகுறித்து தாமோதரன் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் நேற்று மதியம் கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தாமோதரன் லஞ்ச பணத்தை பத்மநாபனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று பத்மநாபனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்