4 லட்சம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்

விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 4 லட்சம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2017-06-01 21:53 GMT

பெங்களூரு,

விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 4 லட்சம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக அரசுக்க எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் கொலைகள்

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலபுரகியில் நேற்று வறட்சி பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து விவரங்களை சேகரித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகத்தில் பா.ஜனதா பிரமுகர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். கேரளாவில் தான் இத்தகைய அரசியல் கொலைகள் அதிகமாக நடக்கின்றன. அந்த மாநிலத்துடன் போட்டி போடும் வகையில் கர்நாடகத்திலும் அரசியல் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கேரளாவில் நடைபெறும் காட்டாட்சி கர்நாடகத்திலும் அமல்படுத்தப்படுகிறது.

சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு

கர்நாடகத்தில் குற்றவாளிகளுக்கு பயம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்டப்பகலில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜனதா தொண்டர்கள் கொலை செய்யப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது. இதை தடுத்து நிறுத்த கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

என்னை குறை கூறி பேசாவிட்டால் சித்தராமையாவுக்கு தூக்கம் வராது. கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த அரசு உதவவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அடுத்த மாதம் (ஜூலை) 15–ந் தேதிக்குள் விவசாய கடனை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

போராட்டம் நடத்தப்படும்

இல்லையெனில் ஜூலை 16–ந் தேதி அன்று பெங்களூருவில் 4 லட்சம் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். ஐதராபாத்–கர்நாடக வளர்ச்சி வாரியத்திற்கு ஒதுக்கப்படும் நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது சட்டவிரோதமானது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்