மற்றொரு பெண்ணிடம் சிரித்து பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: பெண் உயிரோடு எரித்துக்கொலை

பல்லடம் அருகே மற்றொரு பெண்ணிடம் சிரித்து பேசியதை தட்டிக்கேட்ட, பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

Update: 2017-06-01 23:30 GMT

பல்லடம்,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி சித்ரா (வயது 36). இவருடைய சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள மாத்தூர் ஆகும். சித்ரா கட்டிட வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சித்ரா தனது கணவர் ரத்தினத்தை பிரிந்தார். அதன்பின்னர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் வசித்து வந்தார். அவருடன் அவருடைய மகளும் தங்கி இருந்தார்.

சித்ரா கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அவருடைய மகள் பல்லடத்தில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார்.

ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினர்

இந்த நிலையில் கட்டிட வேலைக்கு சென்று வந்த சித்ராவிற்கும், அவருடன் கட்டிட வேலை பார்க்கும் சரவணன் (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சரவணனுக்கும் சொந்த ஊர் திருமங்கலம் ஆகும். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். சரவணனுக்கும் சொந்த ஊர் திருமங்கலம் என்பதால் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஓராண்டாக சித்ரா குடியிருக்கும் வீட்டிலேயே இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.

தினமும் வேலை முடிந்து சித்ராவின் மகள், பஸ்சில் பல்லடத்தில் இருந்து சின்னியகவுண்டம்பாளையம் வருவார். அவரை சின்னியகவுண்டம்பாளையம் பஸ் நிலையம் வந்து, வீட்டிற்கு சித்ரா அழைத்து செல்வார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பேன்சி ஸ்டோருக்கு வேலைக்கு சென்ற மகளை அழைத்து வருவதற்காக சின்னியகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு சித்ரா வந்து நின்றார்.

அப்போது அங்கு அந்த பஸ்சில் சித்ராவின் மகளும், சரவணணும் இருந்தனர். இதற்கிடையில் சரவணன், அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் சிரித்து பேசிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா, சரவணனிடம் பேசாமல், தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் சரவணனும் வீட்டிற்கு வந்தார். அப்போது பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் பேசியது குறித்து சரவணனிடம், சித்ரா விவரம் கேட்டார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உயிரோடு தீ வைப்பு

அன்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், சித்ரா மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அலறி துடித்தார்.இவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சித்ராவின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சித்ரா நேற்று இறந்தார்.

இதுகுறித்து சித்ராவின் மகள் சிவரஞ்சனி பல்லடம் போலீஸ் நிலையத்தில் தனது தாய் மீது சரவணன் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் சரவணன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பல்லடம் அருகே பெண்ணை மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்