அ.தி.மு.க.வின் பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற நினைக்கிறது முத்தரசன் பேட்டி

அ.தி.மு.க.வின் பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற நினைக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2017-06-01 23:15 GMT

திருப்பூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இறைச்சிக்காக மாட்டை விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மனிதன் என்ன உண்ண வேண்டும் என்பதை அவன் தான் தீர்மானிக்க வேண்டும். மாட்டு இறைச்சி தடைக்கு பல்வேறு மாநில முதல்–மந்திரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்–அமைச்சர் இதுவரை தனது நிலைபாட்டை தெரிவிக்கவில்லை. மாநில அரசு மவுனத்தை கலைத்து தனது நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. தற்போதைய சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று பயப்படுகிறார்கள். தேர்தலை சந்திக்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை.

பா.ஜனதா

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடியுடன் நட்பு கொண்டிருந்தாலும் தமிழகத்தின் உரிமையை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுக்க வில்லை. தமிழகத்தின் நலனுக்கான திட்டங்களை மத்திய அரசிடம் போராடி பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறிக்கிறது.

தமிழகத்தில் இதுவரை இருந்த முதல்–அமைச்சர்கள் ஆட்சி காலத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது. அதை எதிர்த்து கேட்பதற்கு மாநில அரசு தயாராக இல்லை. வருமானவரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை என்று நடத்தி அ.தி.மு.க. அரசை மத்திய அரசு அடி பணிய வைக்க நினைக்கிறது. அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என இரு பிரிவாக உள்ளனர். அ.தி.மு.க.வில் உள்ள இந்த பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற நினைக்கிறது. அ.தி.மு.க.வில் இரு அணிகளும் சேருவதா?, வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மோடி உள்ளார். தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமியும், தான் பதவிக்கு வர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும் மோடியை சந்தித்து வருகின்றனர். மாநில அரசை இயக்கும் சக்தியாக மோடி இருக்கிறார்.

மாநில நிர்வாக குழு கூட்டம்

இன்று(வெள்ளிக்கிழமை), நாளை(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது. வருகிற 7–ந் தேதி, 8–ந் தேதி ஆகிய 2 நாட்கள் கோவையில் கட்சியின் மாநில குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் ராஜா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகி நல்லக்கண்ணு உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்தும், அதற்காக தொடர்ந்து இயக்கம் நடத்துவது குறித்தும் இந்த கூட்டங்களில் விவாதித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் மாநில துணைச்செயலாளர் சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி. பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்