பெண்கள் போராட்டத்தால் மதுக்கடைக்கு ‘சீல்’ வைப்பு

நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்ட மதுக் கடைக்கு எதிராக பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த கடையை பூட்டி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

Update: 2017-06-01 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் அண்ணாநகர் உள்ளது. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாநகர் பிரிவு சாலையில் இருந்து வேட்டாம்பாடி செல்லும் சாலையில் சாய்நகர் சுடுகாடு அருகே புதிதாக மதுக்கடை திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர்.

இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் இப்பகுதியில் மதுக்கடை அமைக்கப்படாது என உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று மீண்டும் அப்பகுதியில் மதுக்கடையை திறந்து டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நாமக்கல்-துறையூர் மெயின் ரோட்டில் அண்ணாநகர் பிரிவில் திடீரென கற்களை சாலையில் அடுக்கி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தகவல் அறிந்ததும் நாமக்கல் தாசில்தார் ராஜகோபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்கள் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு ‘சீல்’ வைத்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர்.

மதுக்கடைக்கு ‘சீல்’

இதையடுத்து தாசில்தார் ராஜகோபால் பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுக்கடையை பூட்டி ‘சீல்’ வைத்தார். இதைத்தொடர்ந்து பெண்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் நேற்று நாமக்கல்-துறையூர் சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்