திருப்பூர் மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,000–க்கு விற்பனை

திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,000–க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2017-06-01 21:35 GMT

திருப்பூர்,

திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் வார நாட்களில் தினசரி 40 டன் மீனும், விடுமுறை மற்றும் விசே‌ஷ நாட்களில் 50 டன் மீனும் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மீன் பிடி தடை காலம் அமலில் உள்ளன.

இதனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுமார் 10 முதல் 15 டன் வரை மட்டுமே மீன் விற்பனைக்கு வருவதால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கேரளாவில் இருந்து 5 டன், கர்நாடகாவில் இருந்து 10 டன் என்று மொத்தம் 15 டன் மீன் விற்பனைக்கு வந்திருந்தது. அனைத்து மீன்களின் விலையும் அதிகரித்து இருந்ததால் விற்பனை மிகவும் குறைந்திருந்தது.

இது குறித்து மீன் மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,000

மீன்வரத்து குறைந்துள்ளதால் கடந்த வாரம் ரூ.800–க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சிரம் மீன் நேற்று ரூ.1,000–க்கும், ரூ.250–க்கு விற்கப்பட்ட சங்கரா, ஊழி மீன் கிலோ ரூ.300–க்கும், ரூ.300–க்கு விற்கப்பட்ட விலா, பாற, நண்டு, இறால் ஆகியவை கிலோ ரூ.400–க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல ரூ.150–க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அயிலை ரூ.250–க்கும், ரூ.100–க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெய் மீன் ரூ.110–க்கும், ரூ.110–க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கட்லா ரூ.120–க்கும், ரூ.90–க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மத்தி மீன் ரூ.150–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதால் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விற்பனைக்கு வந்துள்ள மீன்களில் பாதிக்கு மேல் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்