ஜமாபந்தியில் 38 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கலெக்டர் வழங்கினார்

கும்பகோணத்தில் நடந்த ஜமாபந்தியில் 38 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

Update: 2017-06-01 22:45 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள 124 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 25-ந் தேதி தொடங்கியது. ஜமாபந்தியின் நிறைவு நாள் முகாம் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி அனைத்து அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் பேசியதாவது:- நீர் நிலைகளின் வரைபடத்தை வட்ட அலுவலகங்களிலும் கணினியில் பதிவு செய்ய வேண்டும். ஜமாபந்தி நிகழ்ச்சியை சடங்கு, சம்பிரதாயமாகி விடக்கூடாது. இதில் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். வறட்சி நிவாரணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்களில் கழிவு நீர் கலந்து செல்கிறது. பாசன வாய்க்கால் மராமத்து பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டு மனைப்பட்டா

இதைத்தொடர்ந்து கலெக் டர் அண்ணாதுரை, 38 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 35 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக கும்பகோணத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 817 மனுக்களை வழங்கி உள்ளனர். இதில் 81 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. நில ஆவணங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும். தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 92 ஆயிரத்து 422 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வங்கி கணக்கு மூலமாக வழங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந் தேதிக்குள் வறட்சி நிவாரணத்தை வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் வட்டத்தில் 44 குளங்களும், 11 பாசன வாய்க்கால்களும் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதியால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்