தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: பெயிண்டருக்கு 2 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய பெயிண்டருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2017-06-01 21:32 GMT
தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கொத்தன்காடு சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராசேந்திரன்(வயது44). இவர் வேதாரண்யத்தில் பழக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த திரிலோகசந்தர்(38) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி மாலை 5 மணி அளவில் வேதாரண்யம் கீழசன்னதி தெருவை சேர்ந்த சந்தானம் மகனான பெயிண்டர் வேலை பார்க்கும் சரவணன்(28) என்பவர் கடைக்கு வந்தார். அவர் கடையில் இருந்த திரிலோகசந்தரிடம் கடனுக்கு வாழைப்பழம் கேட்டார். ஆனால் கடனுக்கு பழம் கிடையாது என்று கூறியதால் அவரை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் சரவணன் திட்டிவிட்டு சென்றார்.

சிறிதுநேரத்தில் அரிவாளுடன் வந்த அவர் திடீரென திரிலோகசந்தரை வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் காயம் அடைந்த அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

2 ஆண்டு சிறை

வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 324(ஆயுதங்களால் கொடுங்காயம் ஏற்படுத்துதல்)-ன் கீழ் குற்றவாளி என தீர்மானித்து சரவணனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். அரசு தரப்பில் வக்கீல் சதீஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்