11 ஆயிரம் பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் 11 ஆயிரம் பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் விவேகானந்தன் பேசினார்.

Update: 2017-06-01 22:45 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா பேகாரஅள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். தனித்துணை கலெக்டர் குப்புசாமி, உதவி கலெக்டர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 75 மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த முகாமில் சமூகபாதுகாப்பு திட்ட உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வேளாண் உதவித்தொகை என பல்வேறு துறைகள் சார்பில் 171 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 27 ஆயிரத்து 853 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக் டர் விவேகானந்தன் வழங்கினார்.

4, 800 வீடுகள்

முகாமில் கலெக்டர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைப்படி அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள் பங்கேற்றுள்ள மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதம் ஒரு கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. காரிமங்கலம் தாலுகாவில் 1,000 ஹெக்டேர் அளவிற்கு மானாவரி நிலங்களை உழவு செய்ய மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சமூக பொருளாதார கணக்கெடுப்பு விதியை தளர்த்தி தர்மபுரி மாவட்டத்திற்கு இந்திரா குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்டத்தில் 4,800 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் 11 ஆயிரம் பேருக்கு விலையில்லா வீட்டுமனைபட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இந்த முகாமில் மாவட்ட சமூகநல அலுவலர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலாஹிஜான், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, கலால் உதவி ஆணையர் மல்லிகா, தாசில்தார் கண்ணன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்